நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எதிர்பாதையில் புகுந்த கார் டுரியான் லாரியுடன் கோர மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி

லிப்பிஸ்: 

பஹாங் மாநிலத்தின் லிப்பிஸ்–பெந்தா சாலையில் டுரியான் ஏற்றிச் சென்ற லாரியுடன் கார் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்தனர்.

நேற்று இரவு சுமார் 9.20 மணியளவில், பெந்தா சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) அலுவலகத்திற்கு அருகிலுள்ள 18-ஆவது கிலோமீட்டர் பகுதியில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

லிப்பிஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்பிரிண்டெண்டன் இஸ்மாயில் மான், கிளந்தானிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்ற கார் ஒன்றில் 47 வயதுடைய ங் சீ ஜோ, மூன்று சீனப் பிரஜைகள் பயணித்துக் கொண்டிருந்தனர். அதேவேளையில், ராவூபிலிருந்து கிளந்தானுக்கு டுரியான் பழங்களை ஏற்றிச் சென்ற லாரியை 37 வயதுடைய உள்ளூர் நபர் ஓட்டிச் சென்றதாகத் தெரிவித்தார்.

ஆரம்பக் கட்ட விசாரணைகளின்படி, சம்பவ இடத்தை அடைந்தபோது கார் திடீரென எதிர்பாதைக்குள் நுழைந்து, எதிர்திசையில் வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியதாக நம்பப்படுகிறது.

இந்தக் கோர விபத்தில், கார் ஓட்டுநரான ங் சீ ஜோவும், அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத சீனப் பயணி ஒருவரும் பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனிடையே, லாரி ஓட்டுநர், காரில் பயணித்த மற்ற இரண்டு சீனப் பிரஜைகள் காயமடைந்த நிலையில் லிப்பிஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த காவல்துறை, விபத்தை நேரில் கண்டவர்கள் அல்லது சம்பவம் குறித்த தகவல்களை அறிந்தவர்கள் முன்வந்து விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset