நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆசியான்–ரஷ்யா உச்சிமாநாடு: பொருளாதார ஒத்துழைப்பை புதிய உச்சிக்கு கொண்டு செல்லும் மலேசியா

கசான்: 

ஆசியான்–ரஷ்யா நினைவு உச்சிமாநாட்டை முன்னிட்டு இன்று நடைபெறும் ஆசியான்–ரஷ்யா வணிக மன்றத்தில், மலேசியப் பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முக்கிய உரையாற்றவுள்ளார்.

ரஷ்யாவின் தாதர்ஸ்தான் குடியரசின் தலைநகரான கசானில் நடைபெறும் இந்த உயர்மட்ட வணிக மன்றத்தில், ஆசியான் உறுப்பு நாடுகள், ரஷ்யாவைச் சேர்ந்த வணிகத் தலைவர்கள், முதலீட்டாளர்கள், அரச அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

அன்வார் தனது உரையின் மூலம், ஆசியான்–ரஷ்யா பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள், முதலீட்டு ஒத்துழைப்புகள், பிராந்திய வர்த்தக வளர்ச்சி குறித்து வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அவர் ஆசியான்–ரஷ்யா நினைவு உச்சிமாநாட்டின் சிறப்பு இரவு விருந்தில் கலந்துகொள்வதுடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து மரியாதை நிமித்த கலந்துரையாடலிலும் ஈடுபடுகிறார்.

இந்த ஆண்டு நடைபெறும் உச்சிமாநாடு, ஆசியான்–ரஷ்யா உரையாடல் உறவுகளின் 35ஆம் ஆண்டு நிறைவை குறிக்கும் முக்கிய நிகழ்வாகும். 1991ஆம் ஆண்டு தொடங்கிய இந்த உறவு, 1996ஆம் ஆண்டு முழுமையான உரையாடல் கூட்டாண்மையாகவும், 2018ஆம் ஆண்டு மூலோபாய கூட்டாண்மையாகவும் உயர்த்தப்பட்டது.

அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக–கலாசார துறைகளில் இருதரப்பினரும் தொடர்ந்து ஒத்துழைப்பை விரிவுபடுத்தி வருகின்றனர்.

2024ஆம் ஆண்டில் ஆசியான்–ரஷ்யா வர்த்தக மதிப்பு 18.1 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது. அதேவேளை, ஆசியான் பிராந்தியத்தில் ரஷ்யாவின் நேரடி வெளிநாட்டு முதலீடு 367.9 மில்லியன் ரிங்கிட் ஆக பதிவாகியுள்ளது.

மலேசியாவைப் பொறுத்தவரை, 2025ஆம் ஆண்டில் ரஷ்யா ஐரோப்பிய நாடுகளில் நாட்டின் ஒன்பதாவது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக திகழ்ந்தது. 

இருநாடுகளுக்கிடையேயான வர்த்தக மதிப்பு 8.72 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.

மலேசியாவின் முக்கிய ஏற்றுமதிகளில் மின்சார, மின்னணு உற்பத்திப் பொருட்கள், இயந்திரங்கள், உதிரிப்பாகங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் இடம்பெறுகின்றன. அதேசமயம், ரஷ்யாவிலிருந்து பெட்ரோலியப் பொருட்கள், கனிம வளங்கள், இரசாயனப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

1,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட கசான் நகரம், ரஷ்யாவின் முக்கிய இஸ்லாமிய கலாசார மையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ரஷ்யாவுக்கும் இஸ்லாமிய உலகிற்கும் இடையிலான இணைப்புப் பாலமாக விளங்கும் இந்த நகரம், ஆசியான்–ரஷ்யா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய மேடையாக உருவெடுத்துள்ளது.

“ஆசியான்–ரஷ்யா உறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வரலாற்றுச் சந்திப்பில் மலேசியா முக்கிய பங்காற்றுகிறது” என்ற எதிர்பார்ப்புடன், உலக வணிக, அரசியல் வட்டாரங்களின் கவனம் தற்போது கசான் நகரை நோக்கி திரும்பியுள்ளது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset