நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எல் நினோ, தென்மேற்கு பருவக்காற்றை எதிர்கொள்ள தீயணைப்பு, மீட்புத் துறை முழுத் தயார்நிலையில் உள்ளது 

புத்ராஜெயா: 

எல் நினோ நிகழ்வு, தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கத்தால் ஏற்படக்கூடிய பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ள, மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறை (JBPM) முழுமையான தயார்நிலையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த வானிலைச் சூழ்நிலைகள் 2027ஆம் ஆண்டின் தொடக்கம் வரை நாட்டின் காலநிலையைப் பாதிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், செயல்பாடு, தளவாட வசதிகள், பல்வேறு அமைப்புகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பு உள்ளிட்ட அனைத்து தயாரிப்பு நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகத் துறை தெரிவித்தது. 

“அனைத்து பணியாளர்களும் உபகரணங்களும் தற்போது முழு தயார்நிலையில் உள்ளனர். நீண்டகால வெப்பமான, வறண்ட காலநிலையின்போது அதிகரிக்கும் காட்டுத் தீ, கரிநிலத் தீ உள்ளிட்ட திறந்த எரிப்பு சம்பவங்களை எதிர்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான வறட்சி காலம், கரிநிலக் காடு தீ பருவத்திற்கான தயார்நிலை உத்தரவும் வெளியிடப்பட்டுள்ளது. மாநில தீயணைப்பு, மீட்புத் துறை அலுவலகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அவசரகாலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதலாக இது செயல்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் தீ விபத்துகள் அதிகம் பதிவாகியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கமான ரோந்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், குழாய்க் கிணறுகள், நீர்த்தேக்க அணைகள், கண்காணிப்புக் கோபுரங்கள் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளின் செயல்திறனும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகத் துறை தெரிவித்துள்ளது. அவசரநிலைகளின் போது தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு இவை முழுமையாக உதவக்கூடிய வகையில் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

பேரிடர் தடுப்பு, தயார்நிலையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு அரசு, தனியார் அமைப்புகளுடனான ஒத்துழைப்பும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“அவசர அழைப்புகளின் எண்ணிக்கை இயல்பை விட அதிகரித்தால், புகைமூட்டம், திறந்த எரிப்பு தொடர்பான சிறப்பு செயல்பாட்டு அறையை உடனடியாக இயக்கத் துறை தயாராக உள்ளது. இதன் மூலம் அவசரநிலை நடவடிக்கைகளை மேலும் திறம்பட ஒருங்கிணைக்க முடியும்,” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு உபகரணங்கள் அனைத்தும் முழுமையாக செயல்படும் நிலையில் இருப்பதையும், எப்போது வேண்டுமானாலும் களமிறக்கத் தயாராக இருப்பதையும் துறை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், அவசரநிலைகளின் போது விரைவான, பயனுள்ள ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக, அரசின் ஒருங்கிணைந்த வானொலி வலையமைப்பு (GIRN) மூலம் தகவல் தொடர்பு அமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மலேசிய விண்வெளி நிறுவனம் (MySA), சுற்றுச்சூழல் துறை, MyCuaca செயலி, மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் தீ அபாய மதிப்பீட்டு முறைமை (Fire Danger Rating System) உள்ளிட்ட மூலோபாய பங்காளிகள் வழங்கும் டிஜிட்டல் தளங்கள் வழியாக, வெப்பப்புள்ளி (Hotspot) குறியீடுகள், காற்று மாசுக் குறியீட்டு (API) அளவீடுகளைத் துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

நீர் வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும், திறந்த வெளி எரிப்பு நடவடிக்கைகளைத் தவிர்க்கவும், தீ விபத்துகள் ஏற்பட்டால் உடனடியாக 999 அவசர உதவி எண்ணுக்கு தகவல் அளிக்கவும் பொதுமக்களிடம் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன் மூலம் நிலைமை மோசமடைவதற்கு முன்பே விரைவான நடவடிக்கை எடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“காலநிலை மாற்றங்கள், இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலை என்பது மீட்பு அமைப்புகளின் பொறுப்பு மட்டுமல்ல. சமூகப் பாதுகாப்பையும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்த, அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியமாகும்,” என்று அந்த அறிக்கை மேலும் வலியுறுத்தியுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset