செய்திகள் மலேசியா
வேப்பை மறைத்து வைத்துச் செல்லும் ‘ரகசிய டம்ப்ளர்’ விற்பனை அதிகரிப்பு: பெற்றோர்களுக்கு AADK அவசர எச்சரிக்கை
கோலா நெருஸ்:
மின்னணு சிகரெட் (வேப்) போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை மறைத்து எடுத்துச் செல்லும் வகையில் சிறப்பு மறைவிடத்துடன் வடிவமைக்கப்பட்ட ‘டம்ப்ளர்’ நீர்ப் பாட்டில்கள் தற்போது திறந்தவெளியில், குறிப்பாக இணையவழி விற்பனை தளங்கள் மூலமாக எளிதில் கிடைப்பதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமை (AADK) கண்டறிந்துள்ளது.
AADK-யின் தடுப்பு பிரிவு இயக்குநர் சித்தி மரியம் முர்சிடான், இத்தகைய பொருட்கள் இளம் தலைமுறையினரிடையே வேப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் அபாயம் கொண்டவை என்றும், அது பின்னர் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் ஆரம்பக் காரணிகளில் ஒன்றாக மாறக்கூடும் என்றும் எச்சரித்தார்.
திரெங்கானு மாநில அளவிலான “Jelajah Aspirasi Bebas Dadah” நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பயன்படுத்தும் தனிப்பட்ட பொருட்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.
“பிள்ளைகள் என்ன எடுத்துச் செல்கிறார்கள், என்ன பயன்படுத்துகிறார்கள் என்பதை பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும். குடும்பத்தில் உரையாடலும் கண்காணிப்பும் மிக முக்கியம்,” என்றார்.
கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள ஒரு இடைநிலைப் பள்ளி ஆசிரியர் மாணவர்களிடம் இத்தகைய டம்ப்ளர் பயன்படுத்தப்படுவதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் வைரலான காணொலி குறித்து கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை கூறினார். பெற்றோரின் கண்காணிப்பு என்பது பிள்ளைகளைக் கட்டுப்படுத்தும் செயல் அல்ல; மாறாக அவர்கள் தீய பழக்கவழக்கங்களில் சிக்காமல் பாதுகாக்கும் பொறுப்புணர்வான அணுகுமுறை எனவும் விளக்கினார்.
நாடு முழுவதும் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் AADK அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், புகைபிடித்தல், வேப் பயன்பாடு போன்ற பழக்கங்களிலிருந்து இளைஞர்களை விலக்கி வைக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, நாட்டில் தற்போது 191,832 போதைப்பொருள் அடிமைகள், துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளன. தேசிய அளவில் 100,000 மக்கள்தொகைக்கு 560 பேர் என்ற விகிதம் பதிவாகியுள்ள நிலையில், கிளந்தான் (1,105), திரெங்கானு (997), பெர்லிஸ் (970), கெடா (965) ஆகிய எல்லை மாநிலங்கள் அதிக எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளன.
மறுபுறம், சபா மாநிலம் 100,000 மக்கள்தொகைக்கு 230 பேர் என்ற குறைந்தபட்ச விகிதத்தைக் கொண்ட மாநிலமாக பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து புத்ராஜெயா, சிலாங்கூர், லாபுவான், கோலாலம்பூர், சரவாக், ஜொகூர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், இளைஞர்களைப் போதைப்பொருள், வேப் பழக்கத்திலிருந்து பாதுகாக்க குடும்பம், பள்ளி, சமூகத்தின் கூட்டு பங்களிப்பு அவசியம் என AADK வலியுறுத்தியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 13, 2026, 5:46 pm
நாட்டின் முன்னேற்றத்திற்கும் மடானி சமூகக் கட்டமைப்பிற்கும் பெண்களே முதுகெலும்பு: பிரதமர்
June 13, 2026, 4:07 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெஜுவாங் போட்டியிடும்: முக்ரிஸ்
June 13, 2026, 4:06 pm
தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்த வேண்டாம்: ஜாஹித்
June 13, 2026, 4:04 pm
