செய்திகள் மலேசியா
சபாவின் எதிர்காலத்தை ஒளிரச் செய்யும் ‘Sabah MADANI Link': மின்சாரப் புரட்சிக்கு அடிக்கல் நாட்டிய அன்வார்
சிபிட்டாங்:
தெற்கு சபாவின் மின்சாரக் கட்டமைப்புகளை ஒருங்கிணைக்கும் ‘Sabah MADANI Link’ திட்டம், மாநிலத்தின் வளர்ச்சிப் பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பாகும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் வெறும் மின்சார உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் மட்டுமல்ல; மாறாக, கிராமப்புறங்கள், உள்நாட்டுப் பகுதிகளுக்கும் வளர்ச்சியின் பலன்கள் சமமாகச் சென்றடைவதை உறுதி செய்யும் மாற்றத்தின் சின்னமாக விளங்குகிறது என்றார் அவர்.
“வளர்ச்சி என்பது நகரங்களில் மட்டும் குவியக் கூடாது. மாநிலத்தின் தொலைதூர பகுதிகளிலும் மக்கள் அதன் பயனை உணரும்போதுதான் அது உண்மையான வளர்ச்சியாகும்,” என சபா MADANI Link திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் அவர் வலியுறுத்தினார்.
சபா முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி நூர் கலந்து கொண்ட அந்த நிகழ்வில், நகர்ப்புற-கிராமப்புற இடைவெளியைக் குறைத்து, மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதே மடானி அரசாங்கத்தின் முக்கிய இலக்கு என அன்வார் குறிப்பிட்டார்.
அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் சபா மாநில அரசின் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார். குறிப்பாக, இன்னும் பல சவால்களை எதிர்கொள்ளும் உள்நாட்டுப் பகுதிகளில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக எரிசக்தி பாதுகாப்பு உலகின் முக்கிய சவாலாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர், நாட்டின் எரிசக்தி வளங்கள் போதுமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டியது அவசியம் என்றார்.
“Sabah MADANI Link போன்ற திட்டங்கள் மக்களுக்கு நிலையான மின்சாரத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பொருளாதார வளர்ச்சிக்கும் முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கும் உறுதியான அடித்தளமாக அமைகின்றன,” என்று அவர் கூறினார்.
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான நல்லுறவும் அரசியல் நிலைத்தன்மையும் முதலீடுகளை ஈர்க்கும் முக்கிய காரணிகளாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சபா, சரவாக் மாநிலங்களுக்குச் சாலை, நீர், மின்சார உள்கட்டமைப்புகளில் இன்னும் பெரிய முதலீடுகள் தேவைப்படுவதால், அந்த இரு மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும், தென் கிழக்காசிய நாடுகளின் மின் வலையமைப்புடன் இணையும் வாய்ப்பு மூலம், எதிர்காலத்தில் கலிமந்தான், தெற்கு பிலிப்பைன்ஸ் பகுதிகளுக்குப் பசுமை எரிசக்தியை வழங்கும் முக்கிய மையமாக சபா உருவெடுக்கக்கூடும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
“சபா இனி வளர்ச்சியின் பயனாளி மட்டும் அல்ல; பிராந்திய பொருளாதார முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் எரிசக்தி மையமாக உருவாகும் திறன் கொண்டுள்ளது,” என அன்வார் தெரிவித்தார்.
இதனுடன், சிபிட்டாங் மாவட்ட உயர்நிலைப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்காக 250,000 ரிங்கிட் சிறப்பு நிதியையும் பிரதமர் அங்கீகரித்தார்.
மின்சார விநியோகத்தை வலுப்படுத்தி, முதலீடுகளை ஈர்த்து, பசுமை எரிசக்தி மையமாக சபாவை மாற்றும் கனவுடன் தொடங்கியுள்ள ‘Sabah MADANI Link’, மாநிலத்தின் பொருளாதார எழுச்சிக்கான புதிய ஒளிக்கதிராக பார்க்கப்படுகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 13, 2026, 4:07 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெஜுவாங் போட்டியிடும்: முக்ரிஸ்
June 13, 2026, 4:06 pm
தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்த வேண்டாம்: ஜாஹித்
June 13, 2026, 4:04 pm
