செய்திகள் மலேசியா
நாட்டின் முன்னேற்றத்திற்கும் மடானி சமூகக் கட்டமைப்பிற்கும் பெண்களே முதுகெலும்பு: பிரதமர்
கோத்தா கினபாலு:
ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றம் என்பது உள்கட்டமைப்பு வளர்ச்சி அல்லது தொழில்நுட்ப சாதனைகளால் மட்டும் அளவிடப்படுவதில்லை; மாறாக, குடும்பத்தில் உருவாகும் உயரிய பண்புகள், அறிவு, ஒழுக்கத்தின் அடிப்படையில்தான் ஒரு சிறந்த சமூகமும் வலிமையான தேசமும் உருவாகின்றன என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
சபா சர்வதேச மாநாட்டு மையத்தில் (SICC) நடைபெற்ற “Melangkah Bersama MADANI: Wanita Beriman, Wanita Bertahan” நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தாய்மார்களும் பெண்களும் குடும்ப அமைப்பின் மைய சக்தியாக இருந்து, எதிர்கால தலைமுறையை உருவாக்கும் மகத்தான பொறுப்பை ஏற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். ஒரு தாய் வழங்கும் ஆரம்பக் கல்வியும் நற்பண்பு வளர்ப்பும் தான் ஒரு நல்ல சமூகத்தின் வேராக அமைகிறது என்றார் அவர்.
“ஒரு நாட்டின் வளர்ச்சி எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும், குடும்பத்தில் விதைக்கப்படும் ஒழுக்கமும் விழுமியங்களுமே அந்த நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. பெற்றோர், குறிப்பாக தாய்மார்கள், குழந்தைகளின் குணநலன்களையும் மனிதநேயப் பண்புகளையும் வடிவமைப்பதில் மிகப் பெரிய பங்காற்றுகின்றனர்,” என்று அவர் தெரிவித்தார்.
நாட்டின் வளர்ச்சி என்பது வானளாவிய கட்டிடங்கள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற துறைகளில் மட்டும் கவனம் செலுத்தக் கூடாது என்றும், அதனுடன் மனித மதிப்புகள், நல்லொழுக்கம், ஆன்மீக வலிமையையும் வளர்க்க வேண்டியது அவசியம் என்றும் அன்வார் கூறினார். இதுவே மலேசியா மடானி கொள்கையின் அடிப்படை நோக்கமாகும் என்றார்.
கல்வியின் உண்மையான அடித்தளம் வீட்டில்தான் தொடங்குகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். குழந்தைகள் பெற்றோர்களை அறிதல், மதப் போதனைகள், பொறுப்புணர்வு, வாழ்க்கை நெறிமுறைகளைக் கற்றுக்கொள்வது குடும்பத்திலேயே ஆரம்பமாகிறது. பள்ளிக் கல்வி முக்கியமானதாயினும், அதன் வேர்கள் குடும்ப சூழலில்தான் இருப்பதாக அவர் விளக்கினார்.
இஸ்லாமிய வரலாற்றில் பெண்களின் பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர், சையிதத்தினா கதீஜா (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உறுதியான ஆதரவாக இருந்ததையும், சையிதத்தினா அஸ்மா (ரலி) ஹிஜ்ரா பயணத்தில் முக்கிய பங்காற்றியதையும் நினைவுகூர்ந்தார். இஸ்லாமிய வரலாற்றின் ஒவ்வொரு முக்கிய தருணத்திலும் பெண்களின் பங்களிப்பு தனித்துவமானது என்றும் அவர் கூறினார்.
குடும்பம், பொருளாதாரம், சமூக முன்னேற்றம், அரசியல், தேச நிர்மாணம் என அனைத்துத் துறைகளிலும் பெண்கள் ஆற்றும் பங்கு அளப்பரியது என்று வலியுறுத்திய அன்வார், அறிவு, ஒழுக்கம், மனிதநேய மதிப்புகளால் செழித்த மடானி சமூகத்தை உருவாக்க பெண்களின் பங்களிப்பு இன்றியமையாதது எனத் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 13, 2026, 4:07 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெஜுவாங் போட்டியிடும்: முக்ரிஸ்
June 13, 2026, 4:06 pm
தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்த வேண்டாம்: ஜாஹித்
June 13, 2026, 4:04 pm
