செய்திகள் மலேசியா
டிக்டாக் கணக்கு முடக்கங்கள் தொடர்ந்தால் போராட்டம் தீவிரம் பெறும்: ‘ஹிம்புனான் கெகார் டிக்டாக்’ அமைப்பாளர்கள் எச்சரிக்கை
கோலாலம்பூர்:
டிக்டாக் தளத்தில் பயனர்களின் கணக்குகள், பதிவுகள் தொடர்ந்து முடக்கப்படுவதாகக் கூறப்படும் நடவடிக்கைகள் நீடித்தால், ‘ஹிம்புனான் கெகார் டிக்டாக்’ போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும் என அதன் அமைப்பாளர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று சன்வே வெலாசிட்டி V2 கோபுரத்தில் அமைந்துள்ள டிக்டாக் மலேசியா தலைமையகத்தின் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டம், டிக்டாக் பயனர்களின் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் முதல் கட்ட முயற்சி மட்டுமே என தொழிலதிபர் ஆல்பர்ட் டெய் தெரிவித்தார்.
“இது தொடக்கம் மட்டுமே. கணக்குகள், உள்ளடக்கங்களை முடக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தால், ‘ஹிம்புனான் கெகார் டிக்டாக் 2’, ‘ஹிம்புனான் கெகார் டிக்டாக் 3’ என அடுத்தடுத்த போராட்டங்களையும் நடத்துவோம்.
“தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் பயனர்களின் குரலை டிக்டாக் அடக்கக் கூடாது. எங்களின் கருத்துச் சுதந்திர உரிமையை ஒடுக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும்,” என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்தினார்.
இதனிடையே, ARMADA இயக்கக்குழு உறுப்பினரும் சமூக ஆர்வலருமான நயீம் பிரண்டேஜ், அரசாங்கத்தை விமர்சிக்கும் கணக்குகள் குறிவைத்து முடக்கப்படுவதாகக் கூறப்படும் புகார்கள் தொடர்ந்தால், இதுபோன்ற மேலும் பல பேரணிகள் நடத்தப்படும் என்றார்.
“டிக்டாக் மலேசியா பயனர் கணக்குகள் மீதான தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். எந்த நடவடிக்கையும் வெளிப்படைத்தன்மையுடனும் தெளிவான கொள்கை அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
அதேவேளை, சமூக ஆர்வலர் ரஃபிடா இப்ராஹிம், இந்தப் பேரணி கலவரம் அல்லது குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக அல்ல என்றும், கணக்குகள், பதிவுகள் முடக்கப்பட்டதாகக் கூறும் சமூக ஊடக பயனர்களின் குரலை அதிகாரிகளிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் விளக்கமளித்தார்.
“மக்களின் குரல் கேட்கப்பட வேண்டும். முடக்கப்பட்டதாகக் கூறப்படும் கணக்குகள் மீளப் பரிசீலிக்கப்பட வேண்டும். உள்ளடக்கங்கள், கணக்குகளை அகற்றும் நடவடிக்கைகள் குறித்து தெளிவான விளக்கம் வழங்கப்பட வேண்டும்,” என்றார்.
இதற்கு முன்னர், இன்று காலை 10 மணியளவில் தொடங்கிய ‘ஹிம்புனான் கெகார் டிக்டாக்’ பேரணியில் சுமார் 80 பேர் பங்கேற்றனர். டிக்டாக் மலேசியா தலைமையகத்தின் முன்பாக நடைபெற்ற இந்தக் கூட்டம் மதியம் 12 மணியளவில் அமைதியான முறையில் நிறைவடைந்தது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 13, 2026, 4:07 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெஜுவாங் போட்டியிடும்: முக்ரிஸ்
June 13, 2026, 4:06 pm
தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்த வேண்டாம்: ஜாஹித்
June 13, 2026, 4:04 pm
