செய்திகள் மலேசியா
ரோஹிங்கியா விவகாரம்: பொதுமக்கள் சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டாம், பேராக் போலிஸார் கடும் எச்சரிக்கை
ஈப்போ:
சமூக ஊடகங்களில் ரோஹிங்கியா சமூகத்தினரைச் சுற்றி பரவி வரும் பிரச்சாரங்கள், சூடுபிடித்த விவாதங்களின் மத்தியில், பொதுமக்கள் எந்தவிதத்திலும் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளக்கூடாது என பேராக் போலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ முஹம்மத் அல்வி ஜைனல் ஆபிதீன், ரோஹிங்கியா சமூகத்தினரைப் பற்றிய குற்றச்சாட்டுகள் அல்லது தவறான நடவடிக்கைகள் தொடர்பாக யாருக்கேனும் தகவல்கள் இருந்தால், அவற்றை அதிகாரப்பூர்வமாக காவல்துறையிடம் புகாரளிக்க வேண்டும் என்றும், தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுப்பது சட்டத்திற்கு புறம்பானது என்றும் எச்சரித்தார்.
“இதுவரை ரோஹிங்கியா சமூகத்தினரைச் சம்பந்தப்படுத்தி எந்தவொரு அதிகாரப்பூர்வ புகாரும் கிடைக்கவில்லை. எனவே, சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மக்கள் தாங்களாகவே நடவடிக்கை எடுக்க முயற்சிக்கக் கூடாது. சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு காவல்துறைக்கே உரியது,” என்று அவர் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற பேராக் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் பொறுப்பு ஒப்படைப்பு நிகழ்வில் பேசிய அவர், “ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்த யாரேனும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருப்பது நிரூபிக்கப்பட்டால், மற்ற குடிமக்களைப் போலவே அவர்கள்மீதும் சட்டத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.
மேலும், பேராக் மாநிலத்தின் பல பகுதிகளில் வசித்து வரும் ரோஹிங்கியா சமூகத்தினரின் நிலைமைகளைக் காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவையெனில் மாநில அரசுடன் இணைந்து சிறப்பு நடவடிக்கைகள் அல்லது அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
சமூக ஒற்றுமை, பொது அமைதியைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும் என்பதை நினைவூட்டிய காவல்துறை, வதந்திகள், சமூக ஊடக தகவல்களை நம்பி செயல்படாமல், உண்மை தகவல்களை அதிகாரிகளிடம் தெரிவிப்பதே சரியான வழி என பொதுமக்களுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 12, 2026, 5:52 pm
கோலாலம்பூர் பள்ளிகளில் கூடுதல் போக்குவரத்து அதிகாரிகளை போலிஸ் பணியில் அமர்த்தியுள்ளது
June 12, 2026, 12:47 pm
ஜொகூர் மாநிலத் தேர்தல் ஜூலை 11, நெகிரி செம்பிலான் ஆகஸ்ட் 1இல் நடைபெறும்: தேர்தல் ஆணையம்
June 12, 2026, 12:45 pm
