நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சூதாட்ட மையங்களில் இருந்து பணம் வசூலிக்க கட்டாயப்படுத்தினாரா?: வங்சா மாஜு காவல் நிலையத் தலைவர் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு

கோலாலம்பூர்: 

வங்சா மாஜு மாவட்ட காவல் தலைமையகத்தின் (IPD) கீழ் செயல்படும் ஒரு காவல் நிலையத் தலைவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள அதிகார துஷ்பிரயோகம், ஊழல் குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரச மலேசிய காவல் துறை (PDRM) இதுகுறித்து அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது.

கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் டத்தோ ஃபடில் மார்சூஸ், குற்றச்சாட்டுகள் உண்மையா அல்லது வெறும் ஆதாரமற்ற அவதூறா என்பதை உறுதிப்படுத்த விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதற்காக மாவட்ட காவல் துறைத் தலைவரும், ஒருமைப்பாடு, தரநிலை இணக்கப் பிரிவும் (Integrity and Standards Compliance Department) உடனடியாக நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

“இந்த விவகாரத்தில் எவ்வித சமரசமும் இன்றி உண்மை நிலை கண்டறியப்படும். குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் உள்ளனவா, சம்பவங்கள் உண்மையில் நடந்துள்ளனவா என்பதை முழுமையாக ஆராய்ந்து வருகிறோம்.

சம்பந்தப்பட்ட அதிகாரியின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தற்போதைக்கு அவர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்,” என ஃபடில் மார்சூஸ் விளக்கமளித்தார்.

இன்று செராஸில் உள்ள எஸ்எம்கே ஆலாம் டாமாய் பள்ளியில் நடைபெற்ற போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குப் பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர், “விசாரணை முடிவுகள் உறுதியான ஆதாரங்களை வெளிப்படுத்தினால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என எச்சரித்தார்.

இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் வைரலான ஒரு திரைப்பிடிப்பு (screenshot) மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. அதில், இன்ஸ்பெக்டர் பதவியில் உள்ள அதிகாரி ஒருவர் தனது கீழ் பணியாற்றும் காவலர்களை, வங்சா மாஜு பகுதியில் இயங்கும் சூதாட்ட மையங்கள், மசாஜ் நிலையங்களிடமிருந்து ‘உஃப்தி’ எனப்படும் சட்டவிரோத வசூலை மேற்கொள்ள கட்டாயப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், அந்த அதிகாரி தனது கீழ் பணியாளர்களைப் பயன்படுத்தி வெளிநாட்டவர்களிடம் மிரட்டி பணம் பறிக்கச் செய்ததாகவும், மேலும் சில பெண் பணியாளர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்ததாகவும் சமூக ஊடக பதிவில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகள் உண்மையா என்பதை கண்டறிய காவல்துறை தற்போது தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset