நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லடாக்கை நோக்கி அன்சன் மோட்டார் கிளப்: சாதனைப் பயணத்திற்குத் தயாராகும் தெலுக் இந்தான் இளைஞர்கள்

தெலுக் இந்தான்:

பேரா மாநிலத்தின் தெலுக் இந்தானைச் சேர்ந்த அன்சன் மோட்டார் கிளப் உறுப்பினர்கள், எதிர்வரும் ஜூன் 18ஆம் தேதி தொடங்கி ஜூன் 27ஆம் தேதி வரை இந்தியாவின் உலகப் புகழ்பெற்ற லடாக் மலைப்பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிள் சாகசப் பயணத்தை மேற்கொள்ளத் தயாராகி வருகின்றனர்.

இளைஞர்களிடையே பெரிய மோட்டார் சைக்கிள் சவாரியை ஆரோக்கியமான, பயனுள்ள பொழுதுபோக்கு நடவடிக்கையாக ஊக்குவிப்பதே இப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும் என அன்சன் மோட்டார் கிளப்பை சேர்ந்த திணேஷ் ராவ் முனியாண்டி, குணசேகரன் பாலன், நிக்கோலஸ் அம்ப்ரோஸ், எஸேக்கியேல் பான்செமின், ஷசிதரன் தேவராஜா ஆகியோர் கூறினர்.

உலகின் தலைசிறந்த மோட்டார் சைக்கிள் சாகசப் பயண தலங்களில் ஒன்றாக விளங்கும் லடாக், உயரமான மலைப்பாதைகள், கண்கவர் இயற்கைக் காட்சிகள், சவால்மிக்க சாலைகளுக்காக உலகம் முழுவதிலுமுள்ள சவாரி ஆர்வலர்களால் விரும்பப்படுகிறது. அந்த கனவுப் பயணத்தை நனவாக்கும் நோக்கில் தாங்கள் தற்போது தீவிர ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் அனைவரும் குறிப்பிட்டனர்.

இதற்கு முன்னர் தாய்லாந்து, மியான்மார், லாவோஸ் போன்ற எல்லைப் பகுதிகள் வரை மோட்டார் சைக்கிள் சாகசப் பயணங்களை நாங்கள் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளோம்.

அந்தப் பயணங்கள் எங்களுக்கு பல்வேறு அனுபவங்களையும் புதிய நட்புறவுகளையும் வழங்கியதோடு, பல நாடுகளின் கலாசாரங்களையும் மக்களின் வாழ்க்கை முறைகளையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன என்றனர்.

அவ்வகையில் லடாக் பயணம் தங்களுக்கு பொறுமை, ஒழுக்கம், இயற்கையின் மீதான மரியாதை மற்றும் சவாலான சூழ்நிலைகளில் அமைதியாக செயல்படும் திறனை மேலும் வளர்க்கும் என அவர்கள் அனைவரும் நம்பிக்கை தெரிவித்தனர்.

வாழ்க்கையின் எளிமையான தருணங்களை ரசிக்கவும், ஆடம்பரத்திற்கு அப்பாற்பட்ட அனுபவங்களைப் பெறவும் இதுபோன்ற பயணங்கள் உதவுவதாக அவர்கள் மேலும் கூறினர்.

அதோடு, லடாக்கின் மாறுபட்ட காலநிலை, உயரமான மலைப்பாதைகள், கடினமான சாலைச் சூழ்நிலைகள் தங்களின் மனவலிமை, உடல் சகிப்புத்தன்மையைச் சோதிக்கும் என்பதால், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் தொழில்நுட்பத் தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும்
அன்சன் மோட்டார் கிளப்பின் பொறுப்பாளர்களான
அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், லடாக் பயணத்தைத் தொடர்ந்து எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் இலங்கையை நோக்கிய மற்றொரு மோட்டார் சைக்கிள் சாகசப் பயணத்தையும் அன்சன் மோட்டார் கிளப் திட்டமிட்டுள்ளது. “கனவுகளை நோக்கி முதல் அடியை எடுத்து வையுங்கள்; மீதியைப் பாதையே கற்றுத் தரும்” என்ற நம்பிக்கையுடன் இளைஞர்கள் தங்களது கனவுகளைத் துரத்த வேண்டும் என அன்சன் மோட்டார் கிளப் உறுப்பினர்கள் வளர்ந்து வரும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset