செய்திகள் மலேசியா
311 கிராம் கஞ்சா வழக்கு: மரண தண்டனையில் இருந்து தப்பிய திருநங்கைக்கு 5 ஆண்டு சிறை
கோலாலம்பூர்:
311.1 கிராம் கஞ்சா தொடர்பான போதைப்பொருள் வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 38 வயதுடைய திருநங்கை ஒருவருக்கு, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10 பிரம்படிகளையும் விதித்துள்ளது.
நீதிபதி அஸ்லம் ஜைனுதீன் இந்தத் தீர்ப்பை வழங்கினார். குற்றஞ்சாட்டப்பட்டவரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரதிநிதித்துவ மனுவை சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் (AGC) ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, முதலில் போதைப்பொருள் கடத்தல் குற்றமாக இருந்த வழக்கு, போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டாக மாற்றப்பட்டது.
இந்தப் பிரதிநிதித்துவம் வழக்கறிஞர் எம். மனோகரன் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 1952ஆம் ஆண்டின் ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B(2)-இன் கீழ் சுமத்தப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டை, அதே சட்டத்தின் பிரிவு 6-இன் கீழ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டாகக் குறைக்கக் கோரப்பட்டது.
பிரதிநிதித்துவம் ஏற்கப்படுவதற்கு முன்பு, குற்றஞ்சாட்டப்பட்டவர் மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத் தண்டனையை எதிர்கொள்ளும் நிலையில் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கின் விவரங்களின்படி, 2025 மார்ச் 17ஆம் தேதி இரவு சுமார் 10 மணியளவில், புக்கிட் பிந்தாங்கில் உள்ள ஒரு பட்ஜெட் ஹோட்டலில் போலிஸார் குற்றஞ்சாட்டப்பட்டவரைக் கைது செய்தனர். பின்னர், அவரிடம் இருந்த சாவியைப் பயன்படுத்தி ஹோட்டல் அறை திறக்கப்பட்டபோது, கழிவறை தரையில் அலுமினியத் தாளில் சுற்றப்பட்ட நிலையில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு தடுப்பு தன்மையுடைய தண்டனையை விதிக்குமாறு அரசுத் தரப்பு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டது.
எனினும், பாதுகாப்பு தரப்பு வழக்கறிஞர் மனோகரன், குற்றஞ்சாட்டப்பட்டவர் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்துள்ளதாகவும், தண்டனைக்குப் பதிலாக மறுவாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டார்.
இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி அஸ்லம் ஜைனுதீன், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10 பிரம்படி தண்டனையும் விதித்ததுடன், அந்தத் தண்டனை கைது செய்யப்பட்ட நாளிலிருந்தே அமலுக்கு வரும் என்றும் உத்தரவிட்டார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 11, 2026, 9:14 pm
ஜோ லோவின் ஆடம்பர மாளிகையைப் பறிமுதல் செய்ய சைப்ரஸ் நீதிமன்றம் உத்தரவு
June 11, 2026, 5:41 pm
