நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வேலையின்மை மீண்டும் 3% ஆக உயர்வு: 5.1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர்

புத்ராஜெயா: 

மலேசியாவின் தொழிலாளர் சந்தை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணித்தாலும், வேலையின்மை விகிதம் ஏப்ரல் 2026-இல் மீண்டும் 3.0 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மலேசிய புள்ளியியல் துறை (DOSM) வெளியிட்ட புதிய அறிக்கை தெரிவிக்கிறது. 

நாட்டில் தற்போது 5,11,800 பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர் என்பது கவலைக்குரிய தகவலாகப்  பார்க்கப்படுகின்றது.

மார்ச் மாதத்தில் 2.9 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம், ஏப்ரலில் 0.1 சதவீத புள்ளி உயர்ந்து 3.0 சதவீதத்தை எட்டியுள்ளது. இது கடந்த 2025 அக்டோபரில் பதிவான அளவுக்கு மீண்டும் திரும்பியுள்ளதைக் காட்டுகிறது.

இதற்கிடையில், வேலை செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தலைமைப் புள்ளியியலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் முஹம்மத் உஸிர் மஹிடின் தெரிவித்தார். ஏப்ரல் மாதத்தில் பணியில் இருப்போர் எண்ணிக்கை 16.82 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது மார்ச் மாதத்தில் இருந்த 16.80 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 0.1 சதவீத உயர்வாகும்.

மொத்த வேலைவாய்ப்பாளர்களில் 75 சதவீதம் ஊழியர் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களின் எண்ணிக்கை 12.61 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதேவேளை, சுயதொழில், சொந்த வருமானத்தை நம்பி இயங்குவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து 3.15 மில்லியனாக பதிவாகியுள்ளது.

வேலையற்றவர்களில் 79.5 சதவீதம் பேர் தீவிரமாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள் என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்தக் குழுவின் எண்ணிக்கை 4,07,100 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 63.9 சதவீதம் பேர் மூன்று மாதங்களுக்கும் குறைவான காலமாகவே வேலைவாய்ப்பின்றி உள்ளனர். 

அதேநேரத்தில், ஒரு ஆண்டுக்கும் மேலாக வேலை கிடைக்காமல் தவிக்கும் நீண்டகால வேலையற்றோர் 5 சதவீதம் என பதிவாகியுள்ளது.

மேலும், வேலை வாய்ப்புகள் இல்லை என்ற நம்பிக்கையால் வேலை தேடுவதை நிறுத்தியுள்ள செயலற்ற வேலையற்றோர் எண்ணிக்கையும் 1.5 சதவீதம் அதிகரித்து 1,04,700 பேராக உயர்ந்துள்ளது.

இருப்பினும், நாட்டின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை நோக்கி நகர்வதை பிரதிபலிக்கும் வகையில், தொழிலாளர் படை எண்ணிக்கை 17.33 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதேசமயம், தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 70.9 சதவீதமாக மாற்றமின்றி தொடர்கிறது.

பொருளாதார வளர்ச்சி தொடர்ந்தாலும், வேலைவாய்ப்பு தேடி காத்திருக்கும் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களின் எதிர்பார்ப்பு இன்னும் நிறைவேறவில்லை என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset