நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முஸ்லிம்களின் திருமண வயது 18 ஆக உயர்த்துமாறு மாநில அரசுகளுக்கு அமைச்சின் வலியுறுத்தல்

கோலாலம்பூர்: 

முஸ்லிம்களின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை 18 ஆக உயர்த்துமாறு மாநில அரசுகளுக்கு பெண்கள், குடும்பம், சமூக மேம்பாட்டு அமைச்சு வலியுறுத்தியுள்ளது. 

நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்ட நடைமுறையை உருவாக்கும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி ஷுக்ரி, சிலாங்கூர், கெடா மாநிலங்கள் ஏற்கனவே தங்களது சட்டங்களில் திருத்தம் செய்து குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்தியுள்ளதாக தெரிவித்தார்.

“மற்ற மாநிலங்களும் இதேபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டு, முஸ்லிம்களின் திருமண வயது தொடர்பான சட்டத்தை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். முஸ்லிம் திருமண விவகாரம் மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குள் வருகிறது,” என்றார் அவர்.

மத்திய அரசு இந்த விவகாரம் குறித்து பலமுறை மாநிலங்களுடன் கலந்தாலோசித்திருந்தாலும், இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடமே உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“எங்களால் கவலைகளை வெளிப்படுத்தவும், மாநிலங்களுடன் விவாதிக்கவும் மட்டுமே முடியும். ஆனால் இறுதி முடிவை எடுப்பது மத்திய அரசின் பொறுப்பு அல்ல. அதை நடைமுறைப்படுத்துவது மாநில அரசுகளின் கைகளில்தான் உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் எதிர்ப்பு தீர்ப்பாயம் (TAGS) அலுவலக திறப்பு விழா, e-TAGS முறைமை அறிமுக நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறினார்.

இதற்கிடையில், மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (SUHAKAM) நேற்று வெளியிட்ட அறிக்கையில், முஸ்லிம்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை நாடு முழுவதும் 18 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

அதேவேளை, 16, 17 வயதுடைய சிறார்கள் நீதிமன்ற அனுமதி பெற்று திருமணம் செய்ய விண்ணப்பிக்கும் வாய்ப்பு தொடர வேண்டும் என்றும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

குழந்தைகளின் உரிமைகள், கல்வி, உடல்நலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த சீர்திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் சுஹாகம் தெரிவித்துள்ளது.

குழந்தை திருமணங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், முஸ்லிம் திருமண வயதை 18 ஆக உயர்த்தும் முயற்சி தற்போது தேசிய அளவில் முக்கிய விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset