நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா–சரவாக் விமான சேவையில் தொடர் தடங்கல், ஏர் போர்னியோவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த CAAM: பயணிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுமா?

கூச்சிங்: 

சபா, சரவாக் மாநிலங்களில் AirBorneo விமான சேவைகளில் அண்மையில் ஏற்பட்ட தொடர் தாமதங்கள், விமான ரத்துகள், அட்டவணை மாற்றங்கள் தொடர்பாக மலேசியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAM) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

அதேவேளை, 2016ஆம் ஆண்டுக்கான மலேசிய விமானப் போக்குவரத்து நுகர்வோர் பாதுகாப்பு நெறிமுறை (MACPC) கீழ் பயணிகளுக்கான தனது பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றுமாறு AirBorneo-வுக்கு நினைவூட்டியுள்ளது.

CAAM வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த விமானத் தடங்கல்களுக்குச் செயல்பாட்டு, பராமரிப்பு தொடர்பான சிக்கல்களே காரணம் என AirBorneo விளக்கம் அளித்துள்ளது.

விமானப் பாதுகாப்பு எந்தச் சூழ்நிலையிலும் முதன்மை முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள CAAM, அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் நியாயமான முறையிலும், நுகர்வோர் பாதுகாப்பு விதிகளுக்கு இணங்கவும் நடத்தப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது.

“பாதிக்கப்பட்ட பயணிகளுக்கான சிரமங்களைக் குறைக்கும் அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும் AirBorneo மேற்கொள்ள வேண்டும். அதேவேளை, MACPC விதிகளின் கீழ் உள்ள அனைத்து கடமைகளையும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும்,” என CAAM தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், விமான நிலையத்திற்குச் செல்லும் முன் தங்களின் விமான நிலையைச் சரிபார்க்குமாறும், புதுப்பிக்கப்பட்ட தகவல்கள், மாற்று பயண ஏற்பாடுகள், கிடைக்கக்கூடிய உதவிகளுக்காக விமான நிறுவனத்தை நேரடியாகத் தொடர்புகொள்ளுமாறும் பயணிகளுக்கு CAAM அறிவுறுத்தியுள்ளது.

MACPC விதிகளின்படி, விமான நிறுவனங்கள் விமானத் தாமதம், ரத்து அல்லது அட்டவணை மாற்றம் குறித்த தகவல்களை உடனுக்குடன் வழங்க வேண்டும். மேலும், தடங்கலுக்கான காரணங்களைத் தெளிவுபடுத்த வேண்டியதுடன் பயணிகளுக்குக் கிடைக்கும் மாற்று விருப்பங்களையும் அறிவிக்க வேண்டும்.

தடங்கலின் தன்மை, கால அளவைப் பொறுத்து, பயணிகள் உணவு வசதி, தகவல்தொடர்பு வசதிகள், தங்குமிடம், போக்குவரத்து ஏற்பாடு, மாற்று விமானப் பயண வசதி, அல்லது பணத்தைத் திரும்பப் பெறும் உரிமை
ஆகியவற்றைப் பெறத் தகுதியுடையவர்களாக இருக்கலாம் என CAAM தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, பிரச்சினைகளை முதலில் AirBorneo-வின் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை வாயிலாகத் தீர்க்க முயற்சிக்குமாறு CAAM கேட்டுக்கொண்டுள்ளது.

விமான நிறுவனத்தின் பதிலில் திருப்தியில்லாத பயணிகள், FlySmart தளம், ஆன்லைன் புகார் படிவம், மின்னஞ்சல் அல்லது நுகர்வோர் உதவி எண்ணின் மூலம் CAAM-க்கு புகார் அளிக்கலாம்.

AirBorneo, நுகர்வோர் பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றுகிறதா என்பதை தொடர்ந்து மதிப்பீடு செய்து கண்காணிப்பதாக CAAM தெரிவித்துள்ளது.

“தகவல் பரிமாற்றம், உதவி சேவைகள், மாற்று ஏற்பாடுகள், பணத் திருப்பிச் செலுத்தும் செயல்முறைகள் அனைத்தும் வெளிப்படையான, பொறுப்புணர்வுமிக்க,  விரைவான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும்,” என ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே, AirBorneo தலைமை நிர்வாக அதிகாரி மேகாட் ஆர்டியன் விரா முஹம்மாத் அமினுடின், திட்டமிடப்பட்ட பராமரிப்பு, தொழில்நுட்ப திருத்தப் பணிகளால் பல விமானங்கள் ஒரே நேரத்தில் சேவையிலிருந்து விலகியதே இந்தத் தடங்கல்களுக்குக் காரணம் என விளக்கமளித்துள்ளார்.

மேலும், இயல்பான விமான சேவையை விரைவில் மீட்டெடுத்து, பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்காக விமான நிறுவனம் இடைவிடாது செயல்பட்டு வருவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset