நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பேரா இந்தியர் கால்பந்து சங்கத்தின் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து போட்டி: ஜூன் 14இல் நடைபெறுகிறது

ஈப்போ:

பேரா இந்தியர் கால்பந்து சங்கத்தின் ஆதரவில் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்போட்டி வரும் ஜூன் 14ஆம் தேதி நடைபெறவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் முனைவர் இந்திரன் முனியாண்டி தெரிவித்தார்.

பேரா இந்தியர் கால்பந்து சங்கத் தலைவர் டத்தோ அமலுடின் இஸ்மாயிலின் தலைமையில் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேரா மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களும் இதில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு இப்போட்டியில் 20 பள்ளிகளில் இருந்து ஆண்கள் குழுக்களும் 10 தமிழ்ப்பள்ளிகளில் இருந்து 10 பெண்கள் குழுவினர்களும் கலந்துக்கொள்ள விருக்கின்றனர்.

கடந்த 18 ஆண்டுகளாக பேரா இந்தியர் கால்பந்து சங்கம் தொடர்ந்து இவ்வாறான போட்டிகள், திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், இளம் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களின் திறமைகளை வளர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு மாணவர்களின் திறமையை வெளிப்படுத்த மாணவர்களுக்கு பயிற்சியை வழங்க மித்ரா அமைப்பில் மூலம் வழங்கப்பட்ட சிறப்பு நிதியுதவி வழங்கபட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கால்பந்து திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தப் பயிற்சி முகாமில் கிந்தா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சுமார் 50 பேர் பங்கேற்று வருகின்றனர்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் இந்தப் பயிற்சிகளை பேரா இந்தியர் கால்பந்து சங்க உறுப்பினர்களே பயிற்சியாளர்களாக இருந்து நடத்தி வருகின்றனர்.

இந்த முயற்சி வெற்றிகரமாக நடைபெற பெற்றோர்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவு மிக முக்கியமானதாகும் எனக் குறிப்பிட்ட இந்திரன் கிரியாண்டி, அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

மேலும், தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள், பொறுப்பாசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரின் ஒத்துழைப்பும் இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அவர் பாராட்டினார்.

இளம் தலைமுறையினரிடையே விளையாட்டு ஆர்வத்தையும் ஒழுக்கத்தையும் வளர்க்கும் நோக்கில் இத்தகைய திட்டங்கள் எதிர்காலத்திலும் தொடரும் என பேரா இந்தியர் கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset