நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெளிநாட்டவர்களின் விதிமீறலுக்கு இனி இரக்கம் இல்லை: கடும் நடவடிக்கைக்கு பிரதமர் அன்வார் உத்தரவு

கோலாலம்பூர்: 

உரிமம், விசா, வணிக அனுமதிகளைத் தவறாகப் பயன்படுத்தி உள்ளூர் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ள பல்வேறு புகார்களின் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தீவிர கவலை வெளியிட்டுள்ளதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, சட்டத்தை மீறும் அல்லது வழங்கப்பட்ட வசதிகளைத் துஷ்பிரயோகம் செய்யும் எந்தவொரு வெளிநாட்டவருக்கும் எதிராக சட்டத்தின் அடிப்படையில் தயக்கமின்றி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"அனைத்து வணிகர்களும், குறிப்பாக உரிமம், வணிக உரிமை, தொழில் நடத்தும் விதிமுறைகள் தொடர்பான சட்டங்களை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்," என ஃபஹ்மி வலியுறுத்தினார்.

இதற்கிடையில், இந்த அமலாக்க நடவடிக்கை எந்தவொரு குறிப்பிட்ட இனத்தையோ அல்லது சமூகத்தையோ இலக்காகக் கொண்டதல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

"பிரதமர் எந்த ஒரு குறிப்பிட்ட குழுவையும் சுட்டிக்காட்டவில்லை; மக்களிடமிருந்து தொடர்ந்து எழுந்துவரும் புகார்களுக்கே அவர் பதிலளித்துள்ளார்," என்று ஃபஹ்மி கூறினார்.

வெளிநாட்டவர்களின் விதிமீறல்கள், உள்ளூர் வணிகங்களில் சட்டவிரோத தலையீடுகள் தொடர்பான புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset