நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லெபனானில் ஐ.நா. அமைதிப் படையினர் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் விதித்த மலேசியா

கோலாலம்பூர்: 

லெபனானில் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) அமைதிப் படையினரை இலக்காகக் கொண்டு தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களுக்கு மலேசியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன், தாக்குதலில் காயமடைந்து உயிரிழந்த செர்பிய அமைதிப் படை வீரரின் மரணத்திற்காக ஆழ்ந்த இரங்கலையும் வெளியிட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், UNIFIL அமைதிப் படையினருடன் மலேசியா முழுமையான ஒற்றுமையை வெளிப்படுத்துவதாகவும், அமைதிப் படையினரும் பொதுமக்களும் மீது நடத்தப்படும் வன்முறைச் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அறிக்கையில், லெபனானின் இறையாண்மை, நிலப்பரப்பு ஒருமைப்பாட்டுக்கு எதிரான மீறல்களே இந்த வன்முறைச் சம்பவங்களுக்கான முக்கிய காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எந்தச் சூழ்நிலையிலும் அமைதிப் படையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு நியாயம் கற்பிக்க முடியாது என்றும் மலேசியா தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 3-ஆம் தேதி தெற்கு லெபனானின் மர்ஜயூன் பகுதியில் நிகழ்ந்த சம்பவத்தில் காயமடைந்த செர்பிய வீரர் பின்னர் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கும் செர்பிய அரசாங்கத்திற்கும் மலேசியா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது.

மேலும், அதே சம்பவத்தில் காயமடைந்த எல் சால்வடோர், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இரு அமைதிப் படையினரும் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என மலேசியா வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதனிடையே, லெபனானில் நிலவும் வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், ஐ.நா. அமைதிப் படையினர், அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து தரப்பினரும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மலேசியா வலியுறுத்தியுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset