நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலகளாவிய அறைகூவல்களை எதிர்கொள்ள திவெட் புரட்சி; அதிரடித் திட்டங்களுடன் களமிறங்கும் மனிதவள அமைச்சு

புத்ராஜெயா:

செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன், இலக்கவியல் மயமாகும் தொழில் துறை என மாறிவரும் உலகளாவிய பொருளாதார சவால்களை எதிர்கொள்ள, நம் நாட்டிற்கு உயர்தரத் திறன் கொண்ட பணியாளர்கள் மிக அவசியம்.

இதைக் கருத்தில் கொண்டு மனிதவள அமைச்சு நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்விப் பயிற்சி எனப்படும் திவெட் சூழல் மண்டலத்தைத் தொடர்ந்து வலுப்படுத்தும்.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்,  திவெட் என்பது வெறும் திறன் பயிற்சி மட்டுமல்ல.

அது நாட்டின் பொருளாதார அடித்தளம், தொழில் துறையின் வலிமை மற்றும் எதிர்காலப் போட்டித்தன்மையின் திறவுகோல் என்று குறிப்பிட்டார்.

இன்று இங்கு நடைபெற்ற தேசிய திவெட் தினக் கொண்டாட்டத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

தொழில்துறை முன்னணி அமைப்புகள், எதிர்கால திறன் கவுன்சில் ஆகியவற்றின் பங்களிப்புடன், தொழில் துறைக்குத் தேவையான நவீன பயிற்சிகளை வழங்குவதில் அமைச்சு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

இதன் பலனாக, கெசுமாவின் கீழ் பயிற்சி முடித்தவர்களின் வேலைவாய்ப்பு விகிதம் 95.5 சதவீதமாக உள்ளது. 

இதில், 85.1 சதவீதத்தினர் தாங்கள் பயின்ற துறையிலேயே பணிபுரிவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், பயிற்சியின் தரத்தில் 97.2 சதவீத முதலாளிகள் திருப்தி தெரிவித்துள்ளனர்.

வரும் ஜூலை 2026-ன் 'UP_TVET பெர்டானா' சேர்க்கைக்கு, நாடு முழுவதும் உள்ள 315 ‘திவெட்’ நிறுவனங்களில் 20,000-க்கும் மேற்பட்ட இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இது நம் இளைஞர்களுக்கு உயர்தரத் திறன்களைப் பெற்று, சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கான பொன்னான வாய்ப்பாகும்.

மனிதவளத் துறை தனது 33 ‘ஏடிடெக்’ வளாகங்கள் (ஜப்பானிய மலேசிய தொழில்நுட்ப நிறுவனம், புரோட்டான் நிறுவனம் உட்பட) மூலம் திவெட் அமைப்பை வலுப்படுத்தி வருகிறது.

தற்போது உற்பத்தி, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமேஷன், சைபர் பாதுகாப்பு, ரோபாட்டிக்ஸ், ஹைட்ரஜன் தொழில்நுட்பம் போன்ற 11 முக்கிய துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மேலும், புரோட்டான், பெட்ரோனாஸ், பெட்ரோஸ், ஹூவாய் மற்றும் இன்பினியோன் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து, தொழில்நுட்பப் பரிமாற்றம், வேலை வாய்ப்புகளை உறுதி செய்யவும் கெசுமா நடவடிக்கை எடுத்துள்ளது.

குறிப்பாக பினாங்கில் தொடங்கப்பட்டுள்ள கெசுமா செமிகண்டக்டர் அகாடமி எதிர்கால தொழில்நுட்பத் துறையில் மாணவர்களைத் தயார்படுத்துவதில் முக்கிய மைல்கல்லாக அமையும்.

மடானி உள்ளடக்கிய திவெட் அணுகுமுறையின் மூலம், பி40 குழுவினர், மாற்றுத்திறனாளிகள், பூர்வக் குடியினர் மற்றும் கிராமப்புற இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்தப் பயிற்சியைப் பெறுவதை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது. 

இதற்கான முன்னெடுப்பாக, நிபோங் திபால் வளாகம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய திறன் மேம்பாட்டுச் சட்டம் 2006-ஐ சீர்திருத்துவதன் மூலம், ‘திவெட்’ நிர்வாகத்தை மேலும் மேம்படுத்தவும், கற்கும் முறைகளை நெகிழ்வாக்கவும், தொழில் துறையினரின் ஈடுபாட்டை அதிகரிக்கவும் அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாக டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset