நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இலக்கிடப்பட்டவர்களுக்கு உதவிகளும் ரோன்95 மானிய சீர்திருத்தமும் தொடரும்: அன்வார் உறுதி

கோலாலம்பூர்: 

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைப்பதற்காக, இலக்கு அடிப்படையிலான உதவித் திட்டங்கள், ரோன்95 எரிபொருள் மானிய சீர்திருத்தங்களை அரசாங்கம் மேலும் வலுப்படுத்தும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலை, காலநிலை மாற்ற சவால்கள், செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி, புவிசார் அரசியல் மாற்றங்கள் மத்தியில் மலேசியா உறுதியுடன் முன்னேறி வருவதாக அவர் தெரிவித்தார்.

மலேசிய மன்னர் சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழாவில் உரையாற்றிய பிரதமர், நிதிச் சீர்திருத்தங்கள், இலக்கு ரோன்95 மானிய முறை, பூடி மடானி திட்டம் ஆகியவை மக்களின் வாழ்க்கைச் செலவு சுமையைக் குறைக்கும் முக்கிய நடவடிக்கைகளாக அமையும் என்றார்.

அத்துடன், சுகாதாரம், கல்வி சேவைகளுக்கான அணுகலை மேலும் மேம்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

உலக பொருளாதார சவால்கள் நிலவினாலும், மலேசியா தொடர்ந்து நேர்மறை வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதாகக் குறிப்பிட்ட அவர், உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளதோடு, வேலையின்மை விகிதம் குறைந்திருப்பதும், சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கை உயர்ந்திருப்பதும் இதற்கு சான்று என்றார்.

மேலும், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஆதரவு, டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்கள், பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம், குறிப்பாக இளைஞர்களுக்கான தரமான வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி, சமூக நீதியை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடரும் என்றும், நாட்டின் வளர்ச்சி வாய்ப்புகள் அனைத்து மக்களுக்கும் சமமாக சென்றடைய அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் அன்வர் உறுதியளித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset