நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆன்மிகமும் மனிதநேயமும் இணையும் உயரிய வாழ்வியல் பாதை; கெர்லிங்கில் சைவத் திருக்கோயிலும் சைவக் கல்லூரியும் உருவாகவுள்ளது

மஞ்சோங்:

மனித வாழ்வில் ஆன்மிகச் சிந்தனை, நல்லொழுக்கம் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மலேசிய சைவ சமயம் பேரவையின் ஏற்பாட்டிலும் சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் ஆதரவிலும் நடைபெற்ற “மக்களைச் சந்திப்போம் – 5” சிறப்பு சமயக் கருத்தரங்கு, சில தினஙசுகளுக்கு முன்பு சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சமூக நல்லிணக்கம், ஆன்மிக விழிப்புணர்வை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், சமயத்தின் வழியாக மனித வாழ்க்கையில் உருவாகும் உயரிய மாற்றங்கள் குறித்து பல்வேறு ஆன்மிக அறிஞர்கள் கருத்துகளை பகிர்ந்தனர்.

“வழிபாடு ஒரு நெறி” என்ற தலைப்பில் உரையாற்றிய சமயச் சொற்பொழிவாளர் சிவத்திரு பூபாலன் பூவன், வழிபாடு என்பது வெறும் சடங்கு அல்லது மரபு அல்ல; அது மனிதனை ஒழுக்கமும் உயர்ந்த சிந்தனையும் கொண்ட வாழ்விற்கு வழிநடத்தும் ஆன்மிகப் பயணம் எனக் குறிப்பிட்டார்.

மனித மனதில் அமைதி, நல்லிணக்கத்தை உருவாக்கும் ஆற்றல் இறைநம்பிக்கைக்கு உண்டு என்றும் அவர் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து பேசிய ஆன்மிக அறிஞர் சிவத்திரு செல்வகுமாரன் நடராஜன், இறை வழிபாட்டின் உண்மையான வெளிப்பாடு மனிதநேய சேவையில்தான் காணப்படுகிறது என்றார்.

பிறருக்காக செய்யப்படும் தன்னலமற்ற உதவியும் கருணையுடனான செயல்பாடுகளும் உயர்ந்த வழிபாடாகக் கருதப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

வாழ்க்கையின் சவால்கள், மனக்கவலைகளை சமாளிக்க ஆன்மிக சிந்தனை பெரும் துணையாக அமைகிறது என சமயச் சொற்பொழிவாளர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் கூறினார்.

வழிபாடு மனித மனதிற்கு தைரியம் அளிப்பதோடு, உள்ளார்ந்த அமைதியையும் மனவலிமையையும் உருவாக்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, நாயன்மார்கள் போற்றிய “பிள்ளைச் செல்வம்” என்பது பொருளாதார வளத்தை மட்டும் குறிக்காது; பக்தி, பணிவு மற்றும் நல்லொழுக்கம் நிறைந்த தலைமுறையையே உண்மையான செல்வமாகக் கருத வேண்டும் என ஆன்மிக அறிஞர் சிவத்திரு மணிமாறன் கோவிந்தராஜ் எடுத்துரைத்தார்.


தூய எண்ணங்களும் இறைபக்தியும் இணைந்த வாழ்வே மனிதனை உயர்வின் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, உலு சிலாங்கூர் மாவட்டத்தின் கெர்லிங் பகுதியில் உருவாகவுள்ள சைவத் திருக்கோயிலும் சைவக் கல்லூரியும் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

சைவ சித்தாந்தம், ஆகமம், திருமுறை மற்றும் தமிழ் பண்பாட்டை எதிர்கால தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கில் இந்த மாபெரும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

சுமார் 7.5 ஏக்கர் பரப்பளவில் பல கட்டங்களாக அமையவுள்ள இத்திட்டத்தில் சைவக் கல்லூரி, விடுதி, நூலகம், ஆய்வு மையம், தியானக் கூடங்கள் மற்றும் உலகத் தர மாநாட்டு அரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெறவுள்ளன.

ஆன்மிகத்தையும் நவீன கல்வியையும் ஒருங்கிணைக்கும் மையமாக கெர்லிங் உருவாகும் என சிவத்திரு பூபாலன் பூவன் தெரிவித்தார்.

ஆசிரியர் கணேசன் சண்முகம் சிறப்பாக வெகு சிறப்பாக வழிநடத்திய இந்நிகழ்ச்சியில் மஞ்சோங் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர், இந்து சமய அமைப்புகளின் பொறுப்பாளர்கள், ஆலய நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset