நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுபாங் எம்பி வோங் செனுக்கு அதிர்ச்சி நீக்கம்: போர்டல் அணுகல் முடக்கப்பட்ட சில நாட்களிலேயே அரசு பதவி பறிப்பு

கோலாலம்பூர்:

சுபாங் நாடாளுமன்ற உறுப்பினரான வோங் சென், மலேசிய டெட் வென்ச்சர்ஸ் (MDV) தலைவர் பதவியிலிருந்து மே 31 முதல் திடீரென நீக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

22 ஆண்டுகள் தகவல் தொழில்நுட்ப சட்டம், இணைப்பு, கையகப்படுத்தல் துறைகளில் அனுபவமுள்ள கார்ப்பரேட் வழக்கறிஞரான வோங் சென், 56.6 மில்லியன் ரிங்கிட் இழப்பில் தத்தளித்த MDV நிறுவனத்தை மீட்டெடுக்க நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் பொறுப்பேற்ற பின்னர், 2024ஆம் ஆண்டில் நிறுவனம் மீண்டும் இலாப பாதைக்கு திரும்பியதோடு, 2025ஆம் ஆண்டில் இலாப வளர்ச்சியும் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதிர்ச்சியளிக்கும் வகையில், அவரது அலுவலகத்திற்கு வழங்கப்பட்டிருந்த MyKhas அரசாங்க போர்டல் அணுகல் தடுக்கப்பட்ட சில நாட்களிலேயே, அவர் தலைவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார்.

தொகுதி மக்களுக்கான சமூக நிதி விண்ணப்பங்களைச் செயல்படுத்த பயன்படுத்தப்படும் அந்த போர்டல், “புத்ராஜெயாவின் உத்தரவின் பேரில் முடக்கப்பட்டது” என்று வாய்மொழியாக மட்டும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், வோங் செனுக்கு எந்த அதிகாரப்பூர்வ கடிதமோ, தொலைபேசி அழைப்போ வழங்கப்படாதது அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதற்கிடையில், செலாங்கூரிலுள்ள பிற PKR நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தொடர்ந்து அதே போர்டலை பயன்படுத்தி வருவதாகவும், வோங் செனின் அலுவலகம் மட்டும் குறிவைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மார்ச் மாதத்தில் ஊழல் எதிர்ப்பு, நேர்மை, இணக்கப்பாட்டு கொள்கைகளை மையமாகக் கொண்டு MDV “Integrity Day” நிகழ்வை நடத்தியிருந்த நிலையில், இந்த திடீர் நீக்கம் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset