நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

7,057 பேரின் கனவுகள் சிதறின: ஏப்ரலில் வேலை இழந்த மலேசியர்களின் வேதனைக்குரல்

கோலாலம்பூர்:

ஏப்ரல் 2026-இல் மட்டும் 7,057 மலேசியர்கள் தங்களது வேலைகளை இழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் மாதத்தில் 5,855 ஆக இருந்த பணி நீக்க எண்ணிக்கை திடீரென உயர்ந்திருப்பது, நாட்டின் பொருளாதார நிலை குறித்து பலரிடமும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக, உலகளாவிய விநியோக நெருக்கடி, எரிசக்தி விலை உயர்வு, மூலப்பொருள் பற்றாக்குறை போன்ற காரணிகள் பல நிறுவனங்களை கடினமான முடிவுகளுக்கு தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

PERKESO தரவுகளின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களிலேயே 24,100 பேர் வேலை இழந்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 47 விழுக்காடு அதிகரிப்பாகும்.

உற்பத்தித் துறை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிற்சாலைகள் மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் பணிநீக்க அலை பரவி வருவதாகவும் கூறப்படுகிறது.

“வேலை இழப்பு என்பது ஒரு சம்பளம் நின்றுவிடுவது மட்டும் அல்ல; ஒருவரின் நம்பிக்கை, அடையாளம், எதிர்கால கனவுகள் அனைத்தையும் உலுக்கும் அதிர்ச்சி” என்று உருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இரவு நேரங்களில் நிதி சுமை குறித்து மனக்கணக்கிட்டு கவலையுடன் விழித்திருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் மனநிலையை இந்தச் சம்பவம் பிரதிபலிக்கிறது.

இதற்கிடையில், வேலை இழந்தவர்களுக்கு உடனடியாக PERKESO EIS உதவித்தொகையை கோருமாறும், பழைய நண்பர்கள், முன்னாள் சக ஊழியர்கள், தொழில் வட்டாரங்களுடன் தொடர்பைத் தொடருமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், HRDC பயிற்சித் திட்டங்கள், திறன் மேம்பாட்டு முயற்சிகள், சுயதொழில் வாய்ப்புகளும் புதிய வாழ்க்கைப் பாதையை உருவாக்க உதவலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா, “இது தற்காலிக அதிர்ச்சி அல்ல; உலகளாவிய விநியோக நெருக்கடியாக மாறியுள்ளது” என்று எச்சரித்துள்ளார். குறிப்பாக, 2026 இரண்டாம் காலாண்டு இன்னும் சவாலானதாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனால், அரசாங்கம் வேலைவாய்ப்பு பாதுகாப்பு வலையை வலுப்படுத்த வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

“ஒரு கதவு மூடப்பட்டால் மற்றொரு கதவு திறக்கும்” என்ற நம்பிக்கையுடன், ஆயிரக்கணக்கான மலேசியர்கள் புதிய வாழ்க்கைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். “இது முடிவு அல்ல; புதிய அத்தியாயத்தின் தொடக்கம்” என்ற வார்த்தைகள் தற்போது வேலை இழந்தோருக்கு நம்பிக்கையின் ஒளிக்கதிராக மாறியுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset