நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1எம்டிபி நிதியுடன் தொடர்புடைய ஆடம்பர அடுக்ககத்தை அமெரிக்கா பறிமுதல் செய்கிறது

கோலாலம்பூர்:

1எம்டிபி (1MDB) சர்ச்சை மீண்டும் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. முறைகேடாக கையாடல் செய்யப்பட்ட 1எம்டிபி நிதியில் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் நியூயார்க் நகரின் ஆடம்பர அடுக்ககத்தை பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, சுமார் 6 மில்லியன் அமெரிக்க டாலர் (28 மில்லியன் ரிங்கிட்) மதிப்புள்ள இந்த சொத்து, சர்வதேச பணமோசடி, நிதி மோசடி வலையமைப்புடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதோடு, அந்த அடுக்ககத்தின் வாடகை வருமானமும் அமெரிக்க அரசால் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009 முதல் 2015 வரை, 1எம்டிபி நிதியிலிருந்து பில்லியன் கணக்கான டாலர்கள் மோசடியாக கையாடல் செய்யப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த உலக அதிர்ச்சி நிதி ஊழலின் மையநாயகனாக கருதப்படும் ஜோ லோ (Jho Low), இன்னும் மலேசியா, அமெரிக்க அதிகாரிகளால் தேடப்பட்டு வருகிறார்.

விசாரணை தகவல்களின்படி, ஜோ லோவின் தனிப்பட்ட உதவியாளரான கேத்தரின் டான் மே லிங்கின் பயன்பாட்டிற்காக, அந்த ஆடம்பர மாடிக் குடியிருப்பு வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கை அமெரிக்க நீதித்துறையின் பணமோசடி, சொத்து பறிமுதல் பிரிவு, FBI, அமெரிக்க மார்ஷல் சேவையின் உதவியுடன் முன்னெடுத்துள்ளது. மேலும், மலேசியா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளின் ஒத்துழைப்புக்கும் அமெரிக்கா நன்றி தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய நிதி மோசடிகளில் ஒன்றாகக் கருதப்படும் 1எம்டிபி ஊழல், மீண்டும் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset