நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பிரேசில் அணிக்கு அதிர்ச்சி: நெய்மரின் காயம் உலகக் கோப்பை கனவுக்கு பெரும் அச்சுறுத்தலா?

ரியோ டி ஜெனிரோ: 

உலகக் கோப்பை தயாரிப்பில் தீவிரமாக இருக்கும் பிரேசில் அணிக்கு, நட்சத்திர வீரர் நெய்மரின் காயம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ பரிசோதனைக்காக பயிற்சியைத் தவிர்த்த நெய்மரின் நிலை, தற்போது ரசிகர்களிடையே கடும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

வலது கால்தசை காயத்திலிருந்து மீண்டு வரும் 34 வயதான நெய்மர், தேசிய அணியின் முதல் அதிகாரப்பூர்வ பயிற்சியில் பங்கேற்காமல், டெரெசோபோலிஸில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஸ்கேன் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாக பிரேசில் கால்பந்து சம்மேளனம் (CBF) உறுதிப்படுத்தியுள்ளது.

“மருத்துவ குழுவின் முழுமையான மதிப்பீடு முடியும் வரை மேலதிக தகவல் வெளியிடப்படாது” என CBF தெரிவித்திருந்தாலும், நெய்மரின் உடல்நிலை தற்போது பிரேசில் அணியின் மிகப்பெரிய கவலையாக மாறியுள்ளது.

ஏற்கனவே ஆர்சனல், PSG இடையிலான சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் விளையாடியதால் கேப்ரியல் மகல்ஹாஸ், மார்க்வின்ஹோஸ், கேப்ரியல் மார்டினெல்லி ஆகிய முக்கிய வீரர்களை இழந்துள்ள நிலையில், நெய்மரின் காயம் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

2023க்குப் பிறகு முதன்முறையாக தேசிய அணிக்கு திரும்பிய நெய்மர், 128 போட்டிகளில் 79 கோல்களுடன் பிரேசிலின் வரலாற்றுச் சாதனை கோல் வீரராக திகழ்கிறார். ஆனால் தொடர்ச்சியான காயங்கள், சாண்டோஸில் ஏற்பட்ட மோசமான காலம் காரணமாக, அவரது உடற்தகுதி குறித்து ஏற்கனவே கேள்விகள் எழுந்திருந்தன.

பனாமா, எகிப்து, பின்னர் ஆப்பிரிக்க சாம்பியன் மொராக்கோவுக்கு எதிரான உலகக் கோப்பை மோதல்களை எதிர்நோக்கும் நிலையில், “நெய்மர் முழு உடற்தகுதியுடன் திரும்புவாரா?” என்பது தற்போது உலக கால்பந்து ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset