நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக்கோப்பையில் ‘பண பலம்’ காட்டும் பிரான்ஸ்: அர்ஜென்டினாவை மிஞ்சிய சந்தை மதிப்பு

லண்டன்: 

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரில், உலகின் மிக உயர்ந்த சந்தை மதிப்பைக் கொண்ட அணியாக பிரான்ஸ் களமிறங்கவுள்ளது. நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினாவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிக மதிப்புடன் பிரான்ஸ் அணி உலக அரங்கில் கவனம் ஈர்த்துள்ளது.

முன்னணி கால்பந்து வீரர் மதிப்பீட்டு தளமான Transfermarkt வெளியிட்ட தகவலின்படி, பிரான்ஸ் அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 26 வீரர்களின் மொத்த சந்தை மதிப்பு 1.76 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது.

இந்த நட்சத்திரப் பட்டாளத்தின் தலைவரும், அணியின் மிகவும் மதிப்புமிக்க வீரருமான கைலியன் எம்பாப்பே, தனிப்பட்ட முறையில் 230 மில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பைக் கொண்டுள்ளார்.

ரியல் மாட்ரிட் அணியுடன் கடந்த இரண்டு பருவங்களில் கோப்பை வெல்லத் தவறியிருந்தாலும், எம்பாப்பேவின் தனிப்பட்ட ஆட்டத்திறன் ரசிகர்களையும் விமர்சகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 103 போட்டிகளில் 86 கோல்களைப் பதிவு செய்துள்ள அவர், தொடர்ந்து இரண்டு பருவங்களில் லா லிகா கோல்டன் பூட் விருதையும், சாம்பியன்ஸ் லீக் தொடரின் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையையும் தட்டிச் சென்றுள்ளார்.

1.51 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்புடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், 1.45 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாக ஜூட் பெல்லிங்காம், டெக்லான் ரைஸ், புக்காயோ சாகா திகழ்கின்றனர். ஸ்பெயின் அணியை இளம் அதிசயங்களான லாமின் யமால், பெட்ரி வழிநடத்துகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, போர்ட்டுகல், ஜெர்மனி, பிரேசில் ஆகிய அணிகளும் ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான சந்தை மதிப்புடன் உலகின் சக்திவாய்ந்த அணிகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

ஆனால், 2022 உலகக்கோப்பை சாம்பியனான அர்ஜென்டினா, 942 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் எட்டாவது இடத்திலேயே உள்ளது. ஜூலியன் அல்வாரஸ், என்சோ பெர்னாண்டஸ் ஆகியோர் அந்த அணியின் அதிக மதிப்புமிக்க வீரர்களாகத் திகழ்கின்றனர்.

அணியின் இதயத் துடிப்பாக இன்னும் கருதப்படும் லியோனல் மெஸ்ஸி, 38 வயதை எட்டியுள்ள நிலையில் அவரது சந்தை மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது.

உலகின் மிகவும் மதிப்புமிக்க முதல் 10 அணிகளின் பட்டியலை நோர்வே, பெல்ஜியம் அணிகள் நிறைவு செய்கின்றன. நோர்வேயின் கோல் வேட்டைக்காரர் எர்லிங் ஹாலண்ட், 230 மில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்புடன் எம்பாப்பே, யமாலுக்கு இணையாக உள்ளார்.

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் 2026 உலகக்கோப்பை, ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறவுள்ளது.

மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட தொடரில், அணிகள் 12 பிரிவுகளாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுடன், சிறந்த மூன்றாவது இடத்தைப் பெறும் எட்டு அணிகளும் கடைசி 32 சுற்றுக்கு முன்னேறி, பட்டத்திற்கான மாபெரும் வேட்டையைத் தொடரும்.

"பண மதிப்பில் பிரான்ஸ் முதலிடம்; ஆனால் உலகக்கோப்பை மகுடம் யாருக்கு?" என்ற கேள்வி ஏற்கனவே கால்பந்து உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset