நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மத்திய கிழக்கில் பலமுனைப் போர்: அதிர்வலைகளில் சிக்கியுள்ளது உலகப் பொருளாதாரம்

தெஹ்ரான்:

மேற்கு ஆசியாவில் அமெரிக்கா–ஈரான் மோதல் புதிய திருப்பத்தை எட்டியுள்ள நிலையில், தெற்கு ஈரானில் அமெரிக்கப் படைகள் ஏவுகணை ஏவுதளங்கள், கண்ணி வெடிகள் பொருத்திய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தளம் (CENTCOM) அறிவித்துள்ளன. இது “தற்காப்பு நடவடிக்கை” என அமெரிக்க இராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

இதற்கு முன்னர், தெற்கு ஈரானின் முக்கிய துறைமுக நகரமான பந்தார் அப்பாஸில் பலத்த வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக ஈரான் ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. ஹோர்முஸ் நீரிணையை மையமாகக் கொண்ட பதற்றம் தற்போது உலக எண்ணெய் சந்தையையும் அதிரவைத்துள்ளது.

உலக நாடுகள் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக அமெரிக்கா, ஈரான் இடையே முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டணியுடன் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் சாத்தியமான ஒப்பந்தம் தொடர்பாக, ஈரான் உயர்மட்ட பேச்சுவார்த்தை குழு கத்தாருக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இருப்பினும், “சில முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும், உடன்பாடு உடனடியாக எட்டப்படும் நிலை இன்னும் இல்லை” என ஈரான் வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்த போரை முடிவுக்கு கொண்டுவரும் ஒப்பந்தத்தில் சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட பிராந்திய சக்திகளும் இணைந்து, இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்கும் ‘அபிரகாம் ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த அறிக்கை மத்திய கிழக்கு அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிந்தால் அது வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்” என டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில், பேச்சுவார்த்தைகள் “முக்கிய கட்டத்தை” எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இறுதி உடன்பாடு இன்னும் கையெழுத்தாகவில்லை என்பதால் நிலைமை தொடர்ந்து பதற்றமாகவே உள்ளது.

மற்றொரு புறம், லெபனானில் ஹெஸ்புல்லாவுக்கு எதிராக “கடுமையான தாக்குதல்கள்” நடத்துமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு உத்தரவிட்டுள்ளார். “நாங்கள் ஹெஸ்புல்லாவுடன் போரில் இருக்கிறோம்” என அவர் வெளிப்படையாக அறிவித்திருப்பது, பிராந்திய மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

லெபனான் சுகாதார அமைச்சின் தகவலின்படி, மார்ச் 2 முதல் இதுவரை இஸ்ரேல் தாக்குதல்களில் குறைந்தது 3,185 பேர் உயிரிழந்துள்ளதுடன், 9,633 பேர் காயமடைந்துள்ளனர். கிழக்கு பெக்கா பள்ளத்தாக்கு, தெற்கு லெபனான் பகுதிகளில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் கடுமையாக தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை, காசா, லெபனான், ஈரான் என பல முனைகளில் வெடிக்கும் இந்த பதற்றம், உலக அரசியல், பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாக சர்வதேச பார்வையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த மோதல் காரணமாக உலக எண்ணெய் சந்தையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அமைதி ஒப்பந்தம் குறித்த நம்பிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, சர்வதேச எண்ணெய் விலைகள் கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், லெபனானில் ஹெஸ்புல்லாவுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதால், பிராந்திய பதற்றம் மேலும் மோசமடைந்துள்ளது. “போர் எந்த நேரத்திலும் மீண்டும் வெடிக்கலாம்” என்ற அச்சத்தில் உலக நாடுகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

அதேசமயம், உலகின் முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்து வழித்தடமாக கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள பதற்றம், சர்வதேச வர்த்தகம், எரிபொருள் விலை, உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset