நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

டத்தோ சிவநேசன் சுழற்கிண்ண கால்பந்தாட்டப் போட்டி: சித்தியவான் டிண்டிங்ஸ் இந்தியர் சங்கத்தின் முயற்சியில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறமை வெளிச்சம்

மஞ்சோங்:

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறமைகளை மாநில அளவில் மேம்படுத்தும் நோக்கில், சித்தியவான் டிண்டிங்ஸ் இந்தியர் சங்கம் ஏற்பாடு செய்த டத்தோ சிவநேசன் சுழற்கிண்ண கால்பந்தாட்டப் போட்டி, இவ்வாண்டு விரிவான பங்கேற்புடன் புதிய மெருகுடன் சிறப்பாக நடைபெற்றது.

மூன்றாவது ஆண்டாக நடைபெற்ற இப்போட்டி, மஞ்சோங் மாவட்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மன்றம், சித்தியவான் ரேஞ்சர்ஸ் எஃப்சி இணை ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் சித்தியவான் டிண்டிங்ஸ் இந்தியர் சங்க மைதானத்தில் உற்சாகமான சூழலில் நடைபெற்றது.

முந்தைய இரு ஆண்டுகளில் மஞ்சோங் மாவட்ட அளவில் மட்டுமே நடைபெற்ற இப்போட்டி, இம்முறை மாநில அளவிற்கு விரிவடைந்து மஞ்சோங், பாகான் டத்தோ, கீழ்ப்பேராக், பத்தாங் பாடாங் ஆகிய நான்கு மாவட்டங்களிலிருந்து தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பேரா மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் அச்சலிங்கம் இந்நிகழ்ச்சிக்கு வர இயலாத நிலையில், அவரின் பிரதிநிதியாக சித்தியவான் பந்தாய் ரெமிஸ் சட்டமன்ற உறுப்பினர் வோங் மேய் இங் கலந்து கொண்டு இப்போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகையில், இன்றைய மாணவர்களும், இளைஞர்களும் இதுபோன்ற விளையாட்டுத்துறையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நாட்டிற்கும் சமூகத்திற்கும் சமுதாயத்திற்கும் நல்லதோர் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

கல்வி மட்டுமன்றி விளையாட்டிலும் மாணவர்கள் சாதிக்க வேண்டும் என்றும், விளையாட்டு உடல் ஆரோக்கியம், மன உறுதி, ஒற்றுமையை வளர்க்கும் முக்கிய தளமாக விளங்குகிறது என்றும் தெரிவித்தார். 

மேலும் ஒழுக்கம், தன்னம்பிக்கை கொண்ட தலைமுறையை உருவாக்குவதில் விளையாட்டின் பங்கு முக்கியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக இந்நிகழ்ச்சியில் திறப்புரை நிகழ்த்திய சித்தியவான் டிண்டிங்ஸ் இந்தியர் சங்கத் தலைவர் மகாலிங்கம் கோவிந்தசாமி பேசுகையில் மாவட்டம், மாநிலம் மட்டுமன்றி தேசிய நிலையிலும் அனைத்துலக நிலையிலும் நடைபெறும் கால்பந்துப் போட்டிகளிலும் நமது இந்திய இளைஞர்கள் கலந்து கொண்டு பட்டை தீட்டிய வைரங்களாக மிளிர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

அதோடு இளைஞர்கள் தீய வழிகளில் செல்லாமல் தடுக்கவும் அவர்களின் ஆர்வத்தை இதுபோன்ற போட்டிகளில் செலுத்தும் வகையிலும் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இப்போட்டியை
தொடர்ந்து நடத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

12 வயதிற்குட்பட்ட இந்தக் கால்பந்தாட்டப் போட்டியில், ஆண்கள் பிரிவில் 17 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 19 அணிகளும், பெண்கள் பிரிவில் 10 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 11 அணிகளும் பங்கேற்று தங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்தினர். குழு நிலை ஆட்டங்கள், காலிறுதி, அரையிறுதி என பரபரப்பாக முன்னேறிய போட்டி, இறுதிப்போட்டியுடன் கோலாகலமாக நிறைவடைந்தது.

ஆண்கள் பிரிவில் பாரதி தமிழ்ப்பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்று டத்தோ அ. சிவநேசன் சுழற்கிண்ணம், பதக்கங்கள், நற்சான்றிதழ்களை கைப்பற்றியது. மகா கணேசா வித்யாசாலை இரண்டாம் இடத்தையும், ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி மூன்றாம் இடத்தையும் வென்று கோப்பையும், பதக்கங்களும், நற்சான்றிதழும் பெற்றன.

அதேபோல் பெண்கள் பிரிவில் கேஷ்வூட் தோட்டத் தமிழ்ப்பள்ளி அணி முதலிடத்தைக் கைப்பற்றி டத்தோ சிவநேசன் சுழற்கிண்ணத்தையும், பதக்கங்களும், நற்சான்றிதழும் வென்றது. பத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி இரண்டாம் இடத்தையும், வால்புரோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி மூன்றாம் இடத்தையும் வென்று கோப்பையும், பதக்கங்களும், நற்சான்றிதழும் வென்றன.

மேலும் தனிநபர் விருதுகளில், மகா கணேசா தமிழ்ப்பள்ளி மாணவன் ஜோனன் ஜெரெமியா ராஜ் கிருஷ்ணன் சிறந்த கோல் காவலராகவும், பாரதி தமிழ்ப்பள்ளி மாணவன் சர்வின் முத்துக்குமார் சிறந்த வீரராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

பெண்கள் பிரிவில் பத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி ஹஸ்வினி சிவநேசன் சிறந்த கோல் காவலராகவும், கேஷ்வூட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி டாஷினி சசிதரன் சிறந்த கால்பந்து விளையாட்டாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அக்கறைக் கொண்டு இப்போட்டிக்காக 20,000 ரிங்கிட் மானியம் வழங்கிய டத்தோ சிவநேசனுக்கு உளமார்ந்த நன்றியை புலப்படுத்திக் கொண்ட
சித்தியவான் டிண்டிங்ஸ் இந்தியர் சங்கத் தலைவர் மகாலிங்கம்,
இந்த முயற்சியானது எதிர்காலத்தில் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வீரர்களை உருவாக்கும் எனவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மாநில அளவில் வெகு விமரிசையாக நடந்தேறிய இந்தக் கால்பந்தாட்டப் போட்டியில் மலேசிய கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கரநாராயணன், மஞ்சோங் மாவட்ட கல்வி இலாகா அதிகாரிகள், மஞ்சோங் மாவட்ட தலைமையாசிரியர் மன்றத் தலைவர் சுப்ரமணியம் ரெங்கசாமி, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், தேசிய கால்பந்தாட்டப் பயிற்றுநர் நந்தகுமார் காளியப்பன், பெற்றோர், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset