நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உயர் போலிஸ் அதிகாரி விழுந்து உயிரிழந்த வழக்கில் குற்றச் செயல் எதுவும் பதிவாகவில்லை

ஷா ஆலம்: 

நேற்று அதிகாலையில் இங்குள்ள ஒரு கட்டிடத்தின் எட்டாவது மாடியிலிருந்து விழுந்ததாக நம்பப்படும் நிலையில், ஒரு உயர் போலிஸ் அதிகாரி உயிரிழந்த சம்பவத்தில், எந்தவொரு குற்றச் செயல் பற்றிய அறிகுறிகளையும் போலிஸார் கண்டுபிடிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பக் கட்ட விசாரணையில், அந்தச் சம்பவம் ஒரு விபத்து என வகைப்படுத்தப்பட்டதாகச் சிலாங்கூர் போலிஸ் தலைவர் டத்தோ ஷாஸேலி கஹார் தெரிவித்தார்.

"இதுவரை, இது ஒரு விபத்து என்றே நாங்கள் நம்புகிறோம். எந்தவொரு குற்றச் சம்பவமும் பதிவாகியிருப்பதற்கான அறிகுறிகள் இல்லை.

"பிரேத பரிசோதனையும் நேற்று முடிவுற்றது. இறந்தவரின் உடல், பஹாங்கின் குவாந்தானில் உள்ள அவரது சொந்த ஊரில் நேற்றிரவு பாதுகாப்பாக அடக்கம் செய்யப்பட்டது" என்று இன்று இங்கு நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் கூறினார்.

அந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சம்பவத்தின் உண்மையான காரணத்தைக் கண்டறிவதற்கான மேலதிக விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரையும், அவரது குடும்பத்தினரையும் அவமானப்படுத்தும் வகையில், அந்த வழக்கு தொடர்பான தவறான ஊகங்களைப் பரப்ப வேண்டாம் என்று எந்தவொரு தரப்பினரையும் அவர் எச்சரித்தார்.

"அந்த ஊகங்கள் உண்மையற்றவையாகவும், அவதூறு கலந்ததாகவும் இருந்தால், புகார் செய்யப்படலாம், மேலும் விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார் அவர்.

நேற்று, இங்குள்ள செக்ஷன்ன் 14-ல் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து விழுந்ததாக நம்பப்படும் நிலையில், ஒரு உயர் போலிஸ் அதிகாரி உயிரிழந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

42 வயதான அந்த ஆண் அதிகாரி, சிலாங்கூர் கான்டிஞ்சென் போலிஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறையில் (JSJ) பணியாற்றி வந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset