நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மனிதாபிமான ஆர்வலர்களைக் மிருகத்தனமாக நடத்திய இஸ்ரேல் அமைச்சர்

அஷ்டோத்: 

காசா நோக்கிச் சென்ற படகுத் தொடர் ஆர்வலர்கள் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்டு, நெற்றிகள் தரையில் படும்படி செய்யப்பட்ட காணொலியைப் பதிவேற்றியதைத் தொடர்ந்து இஸ்ரேலின் வலதுசாரி பாதுகாப்பு அமைச்சர் இத்தாமார் பென் க்விர் பெரும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.

எக்ஸ் தளத்தில் பதிவேற்றப்பட்ட அந்தக் காணொலி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் ஆகியோராலும் விமர்சிக்கப்பட்டது.

இஸ்ரேலின் தேசிய கீதத்துடன் "இஸ்ரேலுக்கு வருக" என்ற தலைப்புடன் வெளியிடப்பட்ட அந்தக் காணொலி, பென் க்விர் சம்பந்தப்பட்ட ஆர்வலர்களை ஏளனம் செய்வதையும் குறிப்பிட்டுள்ளது. 

இதற்கிடையில், இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபீ, அந்தச் செயலை "அவமானகரமானது" என்று கண்டித்தார்.

"இஸ்ரேலின் மிக உயர்ந்த அதிகாரிகள் அனைவரும் பென் க்விரின் இழிவான செயலைக் கண்டிக்கின்றனர். அந்தப் படகுத் தொடர் ஒரு முட்டாள்தனமான செயலாக இருக்கலாம், ஆனால் பென் க்விர் தனது நாட்டின் கண்ணியத்தைக் கறைப்படுத்தியுள்ளார்" என்று அவர் எக்ஸ் தளத்தில் கூறினார்.

ஐரோப்பிய ஆணையர் ஹட்ஜா லாஹ்பிப், பென் க்விரை விமர்சித்து, "மனிதாபிமானத்தைப் பாதுகாப்பதற்காக யாரும் தண்டிக்கப்படக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

உலகின் பல தலைவர்களும் அந்தக் காணொலிக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,
பென் க்விரின் செயல், "இஸ்ரேலின் மதிப்புகள், நெறிமுறைகளுடன் ஒத்துப்போகவில்லை" என்று நெதன்யாகு சாடியுள்ளார்.

"சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு, அந்த ஆர்வலர்களை விரைவில் வெளியேற்றுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன்" என்றார் அவர்.

காசா மீதான இஸ்ரேலின் முற்றுகையை உடைக்கும் சமீபத்திய முயற்சியில், குளோபல் சுமுட் ஃப்ளோட்டிலாவின் கீழ் சுமார் 50 கப்பல்கள் கடந்த வாரம் துருக்கியிலிருந்து பயணம் செய்தன.

இஸ்ரேலிய அதிகாரிகள், 430 ஆர்வலர்கள் அந்தக் கப்பல்களில் இருப்பதாகக் கூறினர். அதே சமயம், அடாலா என்ற மனித உரிமை அமைப்பு, அவர்களில் சிலர் ஏற்கனவே அஷ்டோத் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.

அந்த வீடியோ, இஸ்ரேலிய தலைமையின் "தார்மீக சரிவு , வலிமிகு இயல்புக்கான" சான்று என்று ஹமாஸ் விவரித்தது.

இஸ்ரேல், அந்தப் படகுத் தொடரை, ஹமாஸுக்கு உதவும் ஒரு விளம்பரச் செயல் என்று குற்றம்சாட்டியது.

2007 ஆம் ஆண்டு முதல் முற்றுகையின் கீழ் உள்ள காசாவின் அனைத்து நுழைவாயில்களையும் இஸ்ரேல் கட்டுப்படுத்துகிறது.

காசா போர் முழுவதும், அந்தப் பிரதேசம் கடுமையான உணவு, மருந்துகள், பிற அடிப்படைப் பொருட்களின் பற்றாக்குறையை அனுபவித்தது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset