நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்

அலோர் காஜா: 

இ-ஹெய்லிங் கட்டணத்தைச் செலுத்த பணம் இல்லாததால், இரண்டு பெண்கள் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று, இந்த மாத தொடக்கத்தில் கோலா சுங்கை பாருவில் நடந்த சம்பவத்தில், ஒரு பெண் ஓட்டுநரை காயப்படுத்தத் துணிந்ததாக நம்பப்படுகிறது.

கடந்த மே 4 ஆம் தேதி, நள்ளிரவு 12.30 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், 41 வயதுடைய பாதிக்கப்பட்டவர், சம்பந்தப்பட்ட கும்பலால் தாக்கப்பட்டதாக நம்பப்படும் நிலையில், அவரது உடலின் பல பகுதிகளில் காயங்கள், வீக்கங்கள் ஏற்பட்டதாகவும், கழுத்தில் கயிற்றின் தடயங்கள் இருந்ததாகவும் தெரிகிறது.

சம்பவத்திற்கு முன் புக்கிட் ரம்பாய் பகுதியில் நான்கு பயணிகளை ஏற்றுவதற்கான ஒரு ஆர்டரை, கிராப் மூலம் பாதிக்கப்பட்டவர் பெற்றுக் கொண்டதாக அலோர் காஜா மாவட்ட போலிஸ் தலைவர் சூப்பிரண்டெண்டன் அஹ்ம்மத் அபு பக்கார் தெரிவித்தார்.

இரண்டு 14 வயதுடைய பெண்களும், 15, 17 வயதுடைய இரண்டு ஆண்களும் அடங்கிய அந்தக் கும்பலில், ஒரு சந்தேக நபர் இன்னும் பள்ளியில் படித்து வருவதாக அவர் கூறினார்.

"கோலா சுங்கை பாருவில் உள்ள காட்டிற்கு அருகில் வந்ததும், சந்தேக நபர்களில் ஒருவர், தனது வங்கி கணக்கில் பணத்தைப் பரிமாற்றம் செய்யும் வரை காத்திருக்க வேண்டும் என்ற காரணத்தைக் கூறி, வாகனத்தை நிறுத்துமாறு பாதிக்கப்பட்டவரிடம் கேட்டுக் கொண்டார்.

பின்னர், சூழ்நிலை பதட்டமாக மாறியதாக அவர் கூறினார். மூன்று சந்தேக நபர்கள் திடீரென ஆக்ரோஷமாக செயல்பட்டு, கடினமான பொருட்களைக் கொண்டு பாதிக்கப்பட்டவரை அடித்தனர். கூடுதலாக, அவர்கள் ஓட்டுநர் இருக்கையின் பின்புறத்தில் இருந்து ஒரு துணியைப் பயன்படுத்தி, அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்தனர்.

சம்பவத்தின் போது, 15 வயதுடைய ஒரு ஆண் சந்தேக நபர் தப்பி ஓடியதால், மீண்டும் காருக்குள் வரவில்லை என்றார் அவர்.

எதிர்க்க வேண்டாம் அல்லது உதவி கேட்க வேண்டாம் என்று பாதிக்கப்பட்டவர் அச்சுறுத்தப்பட்டதாகவும், இருப்பினும், சம்பவ இடத்தில் இருந்து வெளியேறி வாகனத்தை ஓட்டிச் செல்வதன் மூலம் தான் தப்பித்துக் கொண்டதாகவும் அவர் கூறினார். அதற்குப் பின்னர், அவர் போலிஸ் புகாரைப் பதிவு செய்தார்.

"சண்டையின் விளைவாக, அவரது மூக்கு, கழுத்து, இரு கைகளிலும் காயங்கள் ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டது.

"நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு, நாளை வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலதிக நடவடிக்கைக்காக, துணை வழக்குத் தொடரும் அதிகாரியின் மேலதிக உத்தரவுகளுக்காக காத்திருக்கின்றனர்" என்றார் அவர்.

ஒரு ஆயுதம் அல்லது ஆபத்தான பொருளைப் பயன்படுத்தி வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்தியதற்காக, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 324-ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset