நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளாந்தான் தீயணைப்புத் துறையைத் திணறடிக்கும் திறந்தவெளித் தீ மூட்டல் சம்பவங்கள்

கோத்தா பாரு: 

கடந்த மார்ச் மாத தொடக்கத்திலிருந்து கிளாந்தானில் திறந்த வெளித் தீ பரவும் வழக்குகள் திடீரென அதிகரித்ததால், அந்த மாநிலத்தின் மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையின் (ஜே.பி.பி.எம்) செயல்பாட்டுச் செலவுகள் உயர்ந்துள்ளன. பொதுவாக தீயணைப்பு, மீட்புத் துறையின் எரிபொருள் பயன்பாடு ஒரு மாதத்திற்கு 45,000 முதல் 60,000 ரிங்கிட் வரை மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் கடந்த ஏப்ரலில் டீசல் பயன்பாடு 217,000 ரிங்கிட்டை எட்டியுள்ளது கடும் சவாலான நிலையில் கிளந்தான் மாநில ஜே.பி.பி.எம் உள்ளதை எடுத்துக்காட்டுகிறது.

தற்போதைய வறண்ட காலத்தில் அடிக்கடி நிகழும் திறந்த வெளித் தீயை அணைக்கும் நடவடிக்கைகள் காரணமாக இது கணிசமாக அதிகரித்துள்ளதாக ஜே.பி.பி.எம் கிளாந்தான் இயக்குநர் ஃபர்ஹான் சுப்யான் போர்ஹான் கூறியுள்ளார்.

"கடந்த மார்ச் மாதத்தில், டீசல் பயன்பாடு 120,000 ரிங்கிட்டாக அதிகரித்தது, ஏப்ரலில் அது 217,000 ரிங்கிட்டை எட்டியது.

கிளாந்தான் ஜே.பி.பி.எம், கடந்த ஆண்டு முழுவதும்  திறந்த வெளித் தீ தொடர்பான 199 அழைப்புகள் மட்டுமே பதிவு செய்யப்பட்ட நிலையில் இவ்வாண்டு ஏப்ரல் வரை மட்டுமே 2000-க்கும் மேற்பட்ட அழைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அந்த எண்ணிக்கையில், புதர் தீயே அதிக எண்ணிக்கையில் (1,575 வழக்குகள்) பதிவாகியுள்ளதாக ஃபர்ஹான் சுப்யான் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, காட்டுத் தீ (238), குப்பைத் தீ (99), தோட்டத் தீ (37) ஆகியன இருந்தன.

பெரும்பாலான தீ விபத்துகள், நிலத்தை சுத்தம் செய்வதற்கும், வேளாண் நிலத்தைத் திறப்பதற்குமான எரிப்பு நடவடிக்கைகளால் ஏற்பட்டதாக நம்பப்படுவதாகவும், அதற்குப் பின்னர் தீ மற்ற பகுதிகளுக்கும் பரவியதாகவும் அவர் கூறினார்.

மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், 522 வழக்குகளுடன் கோத்தா பாரு முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து, பாசோக் (357), பாசிர் மாஸ் (252) ஆகியன உள்ளன.

கரி நிலத் தீ , குப்பை மேடுத் தீ ஆகியவை மிகவும் சவாலானவை என்றும், அவை அணைக்க நீண்ட நேரம் எடுக்கும் என்றும், கூடுதலாக நீர், இதர வசதிகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

"தானா மேராவில், 40 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கிய கரி நிலத் தீயை அணைக்க 10 நாட்கள் வரை ஆனது. குப்பை மேடுத் தீயை அணைக்க எட்டு நாட்கள் ஆனது" என்றார் அவர்.

தீ விபத்து இடங்களுக்கான அணுகல், நீர் ஆதாரங்களின் பற்றாக்குறை உள்ளிட்ட சவால்களைத் தாம் எதிர்கொள்வதாகவும், இது ஒன்று முதல் இரண்டு கிலோமீட்டர் வரை குழாய்களை இழுக்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

திறந்த வெளித் தீ காரணமாக அதிகரித்த செயல்பாட்டுச் செலவுகள் மிகவும் வருத்தத்திற்குரியது என்றும், அந்த ஒதுக்கீடு துறையின் வசதிகள, திறன்களை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

"மனிதக் கவனக்குறைவு காரணமாக, திறந்த வெளித் தீயை அணைக்கும் பணிகளுக்கு பெரும் ஒதுக்கீட்டைச் செலவழிக்க வேண்டியுள்ளது" என்றார் அவர்.

இதற்கிடையில், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மட்டும் இனி போதுமானதாக இல்லை என்பதால், திறந்த வெளி எரிப்பில் ஈடுபடும் நபர்கள் மீது அபராதம் விதித்தல் உள்ளிட்ட அமலாக்க அணுகுமுறைகளை மேம்படுத்த விரும்புவதாக கிளந்தான் மாநில ஜே.பி.பி.எம் தெரிவித்துள்ளது.

அந்த மாநிலத்தில் திறந்த வெளி எரிப்பு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், ஜே.பி.பி.எம், சுற்றுச்சூழல் துறையுடனும் (ஜாஸ்), உள்ளூர் அதிகாரிகளுடனும் (பி.பி.டி), காவல் துறையுடனும் (பி.டி.ஆர்.எம்) இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset