செய்திகள் மலேசியா
2026 எடெல்மேன் ஆய்வு: உலகின் மிக நம்பிக்கையான நாடுகளின் பட்டியலில் மலேசியாவிற்கு 7-வது இடம்
கோலாலம்பூர்:
மலேசியா, உலகின் மிகவும் நம்பிக்கைக்குரிய நாடுகளில் ஒன்றாக மீண்டும் சர்வதேச அரங்கில் முத்திரை பதித்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான 'Edelman Trust Barometer' ஆய்வில், உலகளவில் ஏழாவது இடத்தைப் பிடித்து மலேசியா பெருமை சேர்த்துள்ளது.
இந்த ஆண்டில் மலேசியாவின் “நம்பிக்கைக் குறியீடு” 66 இலிருந்து 71 ஆக உயர்ந்திருப்பது, அரசாங்கம், வணிக நிறுவனங்கள், ஊடகங்கள், தன்னார்வ அமைப்புகள் மீதான மக்களின் நம்பிக்கை தொடர்ந்து வலுவடைந்துவருவதை காட்டுகிறது.
ஆனால், இந்தப் பெருமையின் பின்னால் கவலைக்கிடமான உண்மைகளும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. மலேசியர்களில் 65% பேர், தங்களின் அரசியல், கலாச்சார, சமூகக் கருத்துகளுடன் ஒத்துப்போகும் நபர்களை மட்டுமே நம்புகிறார்கள் என ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
அதிர்ச்சியூட்டும் வகையில், 87% மலேசியர்கள் “எதிர்மறை கருத்துடையவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்க்கையை கடினமாக்க முயல்கிறார்கள்” என நம்புவதாகத் தெரியவந்துள்ளது. ஆய்வில் இடம்பெற்ற 28 நாடுகளில் இது மிக உயர்ந்த சதவீதமாகும்.
மேலும், வெவ்வேறு அரசியல் கருத்துக்களைக் கொண்ட தகவல் மூலங்களை வாரத்திற்கு ஒருமுறையாவது தேடி வாசிப்பவர்கள் வெறும் 37% மட்டுமே என்பதும் சமூகப் பிளவின் தீவிரத்தைக் காட்டுகிறது.
உள்ளூர் நிறுவனங்கள் மீதான நம்பிக்கையும் வெளிநாட்டு நிறுவனங்களை விட 18 புள்ளிகள் அதிகமாக இருப்பதாக அறிக்கை கூறுகிறது. இதனை ஆய்வாளர்கள் “பழக்கமானவற்றை நோக்கிய மக்களின் திரும்பிச் செல்லும் மனநிலை” என விவரித்துள்ளனர்.
எடல்மேன் மலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மஸூயின் ஜின், “உலகின் மிகவும் நம்பகமான நாடுகளில் ஒன்றாக மலேசியா உருவெடுத்திருப்பது மிகப்பெரிய சாதனை. ஆனால் சமூகப் பிளவுகள் ஆழமடைந்தால், இந்த நம்பிக்கை நீண்ட காலம் நிலைக்காது,” என்று எச்சரித்தார்.
அதேவேளை, பொருளாதார அச்சங்களும் அதிகரித்துள்ளன. உலகளவில் 67% தொழிலாளர்கள் பொருளாதார மந்தநிலை காரணமாக வேலை இழப்பதை அஞ்சுவதாக தெரிவித்துள்ளனர். மலேசியர்களில் பலரும் எதிர்கால தலைமுறையின் வாழ்க்கை தற்போதைய தலைமுறையை விட சிறப்பாக இருக்காது என்ற கவலையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
தவறான தகவல் பரவல் குறித்த பயமும் அதிகரித்துள்ளது. 73% மலேசியர்கள், வெளிநாட்டு தரப்புகள் ஊடகங்களை பயன்படுத்தி நாட்டில் குழப்பத்தையும் பிளவையும் உருவாக்க முயலுகின்றன என அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால், இந்த விவகாரத்தில் உலகின் இரண்டாவது அதிக கவலை கொண்ட நாடாக மலேசியா பதிவாகியுள்ளது.
இந்த ஆய்வு, “நம்பிக்கையை கட்டியெழுப்புவது” இன்று மலேசியாவின் மிகப்பெரிய தேசிய சவாலாக மாறிவிட்டதை வெளிப்படையாகக் காட்டுகிறது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 20, 2026, 6:10 pm
டிக்டாக் பதிவுகளால் நேர்ந்த விபரீதம்: இருவருக்கு அபராதம்
May 20, 2026, 5:18 pm
மெர்சிங்கைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளை ஆய்வு செய்த மாமன்னர்
May 20, 2026, 4:24 pm
BN, GRS, GPS உறுதிமொழி; அன்வருக்கு பலம் சேரும் அரசியல் நகர்வு
May 20, 2026, 12:14 pm
14 வயது மாணவருடன் பாலியல் அத்துமீறல்?: குற்றச்சாட்டுகளை மறுத்த ஆசிரியை
May 20, 2026, 12:00 pm
சரவாக் காடு காப்பகங்களில் இரண்டு புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
May 20, 2026, 11:06 am
