செய்திகள் மலேசியா
காசா மனிதாபிமானக் குழுவினர் இஸ்ரேலால் கடத்தல்: 48 மணி நேரமாகியும் மலேசிய ஆர்வலர்களின் நிலை குறித்து மர்மம்
செப்பாங்:
திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்ட குளோபல் சுமுட் ஃப்ளோட்டிலா (GSF) 2.0-ன் பங்கேற்பாளர்கள் குறித்த எந்தப் புதுப்பிப்புகளையும் இதுவரை பெறவில்லை என்று சுமுட் நுசந்தரா கட்டுப்பாட்டு மையம் (எஸ்.என்.சி.சி) உறுதிப்படுத்தியுள்ளது.
மனிதாபிமான ஆர்வலர்களைத் தடுத்து வைத்து கிட்டத்தட்ட 48 மணி நேரம் ஆன பின்னரும், அவர்களின் நிலை குறித்து அந்த அமைப்பு எதுவுமே கூறவில்லை என்று எஸ்.என்.சி.சி இயக்குநர் ஜெனரல் டத்தோ சனி அரபி அப்துல் அலிம் தெரிவித்துள்ளார்.
"அவர்களின் நிலை குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் நாங்கள் பெறவில்லை.
"அவர்கள் தாக்குத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம். அஷ்டோத் துறைமுகத்தில் அவர்கள் வந்தடைந்த 48 மணி நேரத்திற்குள் இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை என்றால், இது கவனிக்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும்" என்று இன்று GSF 2.0 பணி குறித்த ஊடகச் சந்திப்பில் அவர் கூறினார்.
முந்தைய அறிக்கைகள், துருக்கியின் மார்மாரிஸ் துறைமுகத்தில் இருந்து 54 கப்பல்கள் காசாவை நோக்கிப் புறப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பணி அதன் இறுதிக் கட்டத்தில் நுழைந்துள்ளதாகத் தெரிவித்தன. செயல்பாட்டுப் பகுதியில் சமீபத்திய பாதுகாப்பு இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் மஞ்சள், சிவப்பு மண்டல எல்லைகளைப் புதுப்பித்துள்ளதாகவும் எஸ்.என்.சி.சி தெரிவித்துள்ளது.
"கடந்த ஆண்டு நடைமுறையில் இருந்தது போல, முக்கியமான தருணங்களில், பறிமுதல் செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக, தங்களது கைப்பேசிகளை அப்புறப்படுத்துமாறு நிலையான இயக்க நடைமுறையின் கீழ் பங்கேற்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அவர்கள் கடத்தப்பட்டவுடன் மலேசிய, சர்வதேச பிரதிநிதிகள் குழுக்களுடனான அனைத்து தொடர்புகளும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டன" என்றார் அவர்.
மனித உரிமை அமைப்புகள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகம், தகவல்களை வழங்கவும், ஆர்வலர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கவும் இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவர் கோரினார்.
"இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து மனிதாபிமான ஆர்வலர்களுக்கும் வெளிப்படைத்தன்மையையும், பாதுகாப்பு உத்தரவாதங்களையும் நாங்கள் கோருகிறோம். அவர்கள் ஒரு இராணுவ அச்சுறுத்தலாக அல்ல, மாறாக மனிதாபிமான அடிப்படையில் அங்கு சென்றுள்ளனர்" என்றார் அவர்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில், இஸ்ரேலியப் படைகளின் ஐந்து மூத்த தலைவர்களுக்கு எதிராக கைது ஆணையைப் பிறப்பித்துக் கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக சனி அரபி கூறினார்.
"எங்கள் பிரதிநிதிகள் குழு, தற்போது போர்க் குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டு, சர்வதேச அளவில் தேடப்படும் நபர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதை இது காட்டுகிறது" என்றார் அவர்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 20, 2026, 6:10 pm
டிக்டாக் பதிவுகளால் நேர்ந்த விபரீதம்: இருவருக்கு அபராதம்
May 20, 2026, 5:18 pm
மெர்சிங்கைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளை ஆய்வு செய்த மாமன்னர்
May 20, 2026, 4:24 pm
BN, GRS, GPS உறுதிமொழி; அன்வருக்கு பலம் சேரும் அரசியல் நகர்வு
May 20, 2026, 12:14 pm
14 வயது மாணவருடன் பாலியல் அத்துமீறல்?: குற்றச்சாட்டுகளை மறுத்த ஆசிரியை
May 20, 2026, 12:00 pm
சரவாக் காடு காப்பகங்களில் இரண்டு புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
May 20, 2026, 11:06 am
