நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரின் கழுத்தை நெரித்த நான்கு இளம் பருவத்தினர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்

அலோர் காஜா: 

கடந்த மாதம், பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் ஒருவரைக் காயப்படுத்தி, அவரது கழுத்தை நெரித்த குற்றச்சாட்டில் ஒரு பள்ளி மாணவர் உட்பட நான்கு இளம் பருவத்தினர் இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இரண்டு பெண்கள் உட்பட 14 முதல் 17 வயதுக்குட்பட்ட அனைத்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களும், நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர், மாஜிஸ்திரேட் டாக்டர் தியோ ஷூ யீ முன்னிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

குற்றச்சாட்டின்படி, அவர்கள் ஒருங்கிணைந்து 42 வயதுடைய பாதிக்கப்பட்ட லிம் லிஹ் யினுக்கு, ஆபத்தான பொருளைப் பயன்படுத்தி அவரது கழுத்தை நெரித்து, காயத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

 கடந்த மே 4 ஆம் தேதி, நள்ளிரவு 12.30 மணியளவில், அலோர் காஜா மாவட்டத்தில் உள்ள கோலா சுங்கை பாரு காட்டுப் பகுதிக்கு அருகில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 324-ன் கீழ், அதே சட்டத்தின் பிரிவு 34-உடன் இணைந்து, வழக்குத் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம், அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

இதற்கு முன்னர், துணை வழக்குத் தொடரும் அதிகாரி முஹம்மத் எஹ்சான் நசாருதீன், நடத்தை அறிக்கையைப் பெறுவதற்கான ஒரு தேதியை நிர்ணயிக்குமாறும், ஒவ்வொரு குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும் 2,000 ரிங்கிட் ஜாமீனை வழங்குமாறும் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

அனைத்துக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களும், தேசிய சட்ட உதவி அறக்கட்டளையைச் (YBGK) சேர்ந்த வழக்கறிஞர் கோ ஜீ சீயால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டனர். அவர், அவர்களுக்கான ஜாமீனைக் குறைக்குமாறு கோரினார்.

ஒவ்வொரு குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும் 1,000 ரிங்கிட் ஜாமீனை நீதிமன்றம் அனுமதித்தது. நிபந்தனையாக, அவர்கள் ஒவ்வொரு முறை நீதிமன்றத்தில் ஆஜராகும்போதும், உத்தரவாததாரர்கள் அவர்களுடன் வர வேண்டும். மேலும், வழக்கின் மறு பரிசீலனை, நடத்தை அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான தேதியாக அடுத்த ஜூன் 24 ஆம் தேதியை நிர்ணயித்தது.

இதற்கு முன்னர், இந்த மாத தொடக்கத்தில், கோலா சுங்கை பாருவில், கட்டணம் செலுத்த பணம் இல்லாத காரணத்தால், இரண்டு பெண்கள் கொண்ட இளம் பருவத்தினர், ஒரு பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அந்தச் சம்பவத்தில், 42 வயதுடைய பாதிக்கப்பட்டவர், சம்பந்தப்பட்ட கும்பலால் தாக்கப்பட்டதாக நம்பப்படும் நிலையில், அவரது உடலின் பல பகுதிகளில் காயங்களும் வீக்கங்களும் இருந்தன. மேலும், அவரது கழுத்தில் நெரித்ததற்கான தடயங்களும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset