நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவிற்குள் எபோலா ஊடுருவவில்லை: சுகாதார அமைச்சு

புத்ராஜெயா: 

புண்டிபுகியோ வைரஸால் ஏற்படும் எபோலா வெடிப்பு தற்போது காங்கோ ஜனநாயகக் குடியரசையும் (டி.ஆர்.சி), உகாண்டாவையும் பாதித்திருந்தாலும், இதுவரை மலேசியாவில் எந்த எபோலா வழக்கும் பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சு (கே.கே.எம்) உறுதிப்படுத்தியுள்ளது.

இருப்பினும், சர்வதேசப் பயணங்கள் மூலம் வழக்குகள் பரவும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, தயார்நிலை நடவடிக்கைகளையும், கண்காணிப்பையும் தொடர்ந்து வலுப்படுத்துவதாக கே.கே.எம் தெரிவித்துள்ளது.

உகாண்டா, டி.ஆர்.சியில் இருந்து மலேசியாவிற்குள் நுழையும் பயணிகள், துபாய், டோஹா, சிங்கப்பூர் போன்ற சர்வதேச மையங்களில் விமானங்களில் பயணிப்பவர்கள் உட்பட, கண்காணிக்கப்படுவதாக கூறியுள்ளது.

"தற்போதைக்கு, அந்த இரண்டு நாடுகளில் இருந்தும் மலேசியாவிற்கு நேரடி விமானங்கள் எதுவும் இல்லை.

"பொது சுகாதார இடர் மதிப்பீடு, முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கான கண்காணிப்பும் சோதனையும் தொடர்ந்து வலுப்படுத்தப்படுகிறது" என்று அது இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கூடுதலாக, விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட அனைத்து சர்வதேச நுழைவாயில்களிலும் கே.கே.எம் தயார்நிலையை மேம்படுத்தி வருகிறது. மேலும், தற்போதுள்ள தொற்று நோய்க் கண்காணிப்பு முறை மூலம் வழக்குகளை முன்கூட்டியே கண்டறிவதையும் வலுப்படுத்துகிறது.

சந்தேகத்திற்கிடமான வழக்குகளைக் கண்டறிதல், தனிமைப்படுத்துதல், மேலாண்மை செய்வதற்கான சுகாதார வசதிகளின் தயார்நிலை, தொற்றுத் தடுப்பு, கட்டுப்பாட்டு (ஐ.பி.சி) நடவடிக்கைகளுக்கு இணங்குதல் ஆகியவையும் மேம்படுத்தப்படுவதாக அது கூறியுள்ளது.

தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் (பி.பி.ஈ) தயார்நிலையும், சுகாதாரப் பணியாளர்களின் பயிற்சியும் உகந்த நிலையில் இருப்பதை கே.கே.எம் உறுதி செய்கிறது. மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், தேசிய பொது சுகாதார ஆய்வகம் ஆகியவற்றுடனான ஒத்துழைப்பின் மூலம் ஆய்வக நோயறிதல் திறனையும் வலுப்படுத்துகிறது.

அதன்படி, சம்பந்தப்பட்ட நாடுகளுக்குப் பயண வரலாறு உள்ளவர்கள், அந்த நாட்டிலிருந்து திரும்பிய 21 நாட்களுக்குள், காய்ச்சல், உடல் வலி, வாந்தி அல்லது இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகளை அனுபவித்தால், உடனடியாக சிகிச்சை பெறுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த மே 17 ஆம் தேதி, உலக சுகாதார மையம் எபோலா வெடிப்பை சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது.

மே 16 வரையிலான தரவுகளின் படி, டி.ஆர்.சியின் இத்துரி மாகாணத்தில், ஆய்வகத்தில் உறுதி செய்யப்பட்ட எட்டு வழக்குகள், 246 சந்தேகிக்கப்பட்ட வழக்குகள், 80 சந்தேகிக்கப்பட்ட இறப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

"கூடுதலாக, டி.ஆர்.சி-வுக்குப் பயண வரலாறு கொண்ட ஒரு நபரை உள்ளடக்கிய, உகாண்டாவின் கம்பாலாவில், ஆய்வகத்தில் உறுதி செய்யப்பட்ட இரண்டு வழக்குகள், ஒரு இறப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று அது கூறியுள்ளது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset