நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உணவுப் பாதுகாப்புக்கான அவசர “பாதுகாப்புக் கவசம்” அவசியம்: உலக நெருக்கடிக்கு மத்தியில் ஆசியானை எச்சரித்த அன்வார்

செபு: 

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர் பதற்றம் உலக பொருளாதாரத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் நிலையில், உணவுப் பாதுகாப்பு இனி சாதாரண பொருளாதார விவகாரம் அல்ல, அது பிராந்தியத்தின் உயிர் காக்கும் மூலோபாயக் கேள்வியாக மாறிவிட்டது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் ஆசியான் நாடுகளுக்கு அதிரடியான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை, மே 8 நடைபெற்ற 48-ஆவது ஆசியான் உச்சி மாநாட்டில் உரையாற்றிய அவர், நெருக்கடி காலங்களில் விரைவான ஒருங்கிணைப்பு, அவசர உதவிகளை மேற்கொள்ள, உணவுப் பாதுகாப்பிற்கான “ஆசியான் தயார்நிலை அவசர அமைப்பை” உடனடியாக உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

எரிசக்தி நெருக்கடி தற்போது உணவுப் பாதுகாப்பை கொடூரமாகப் பாதித்து வருவதாகவும், எரிபொருள் விலைகளின் கட்டுக்கடங்காத உயர்வு காரணமாக உரங்கள், போக்குவரத்து, உற்பத்திச் செலவுகள் தீவிரமாக அதிகரித்துள்ளதாகவும் அன்வர் சுட்டிக்காட்டினார்.

இதனால் ஆசியான் முழுவதும் உணவுப் பொருள் விநியோகத்தில் அபாயகரமான அழுத்தம் உருவாகி வருவதாக அவர் எச்சரித்தார்.

“இந்த நிலை நீடித்தால், குறைந்த மகசூல், நீடித்த உணவுப் பணவீக்கம், கடுமையான பொருளாதார தாக்கங்களை அடுத்த ஆண்டும் எதிர்கொள்ள நேரிடும். ஆகவே, உணவுப் பாதுகாப்பு உடனடி பிராந்திய மூலோபாய முன்னுரிமையாக கருதப்பட வேண்டும்,” என்று அவர் ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்தார்.

மேலும், ஆசியான் பிளஸ் த்ரீ அவசர அரிசி இருப்பு (APTERR) திட்டத்தை மேலும் பலப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும், அரிசி இருப்பைத் தாண்டி உரப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட கோலாலம்பூர் பிரகடனத்தை மேற்கோள் காட்டிய அவர், எரிசக்தி பாதுகாப்பு, உணவுப் பின்னடைவு, விநியோகச் சங்கிலி நிலைத்தன்மை, பிராந்திய இணைப்பு ஆகியவை இனி வெறும் துறை சார்ந்த விவகாரங்கள் அல்ல; ஆசியானின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மூலோபாய அஸ்திவாரங்கள் எனக் குறிப்பிட்டார்.

ஆசியான் பெட்ரோலிய பாதுகாப்பு ஒப்பந்த கட்டமைப்பின் (APSA) செயல்பாட்டை விரைவுபடுத்துவதற்கு மலேசியா முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் அன்வர் தெரிவித்தார்.

பிராந்தியத்தில் எண்ணெய், எரிவாயு உற்பத்தி படிப்படியாக குறைந்து வரும் சூழலில், இது எதிர்கால எரிசக்தி பாதுகாப்பிற்கான முக்கிய பாதுகாப்புக் கவசமாக அமையும் என்றார்.

“நாம் எரிபொருள் ஆதாரங்களைப் பன்முகப்படுத்த வேண்டும். பாதிக்கப்படக்கூடிய விநியோகச் சங்கிலிகளின் மீதான அதிக சார்பை உடைக்க வேண்டும். நம்பகமான கூட்டாளர்களுடனான ஒத்துழைப்புதான் ஆசியானின் நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும்,” என்று அவர் உறுதியுடன் கூறினார்.

இதனுடன், பாரசீக வளைகுடா ஒத்துழைப்புக் குழு (GCC), ஆசியான்-GCC-சீனா ஒத்துழைப்பு வலையமைப்பை முழுமையாகப் பயன்படுத்தி, வலுவான, நம்பகமான எரிசக்தி அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். ஆசியான் மின்சாரக் கட்டமைப்பு திட்டம், பிராந்தியத்தின் எரிசக்தி மாற்றத்திற்கும் நீண்டகால பாதுகாப்பிற்கும் இதயமாக விளங்கும் எனக் குறிப்பிட்ட அவர், எல்லை தாண்டிய மின்சார இணைப்புகள், குறைந்த கார்பன் வளர்ச்சிக்காக மிகப்பெரிய முதலீடுகள் அவசியம் என்றார்.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக அங்கு வாழும் ஆசியான் குடிமக்களின் பாதுகாப்பு குறித்தும் அன்வர் தீவிர கவலை வெளியிட்டார்.

தகவல் பகிர்வு, தூதரக ஒத்துழைப்பு, அவசரகால மீட்பு நடவடிக்கைகளை உறுப்பு நாடுகள் உடனடியாக வலுப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், கப்பலோட்டிகள், மாணவர்கள், அமைதி காக்கும் படையினர் வரை ஆயிரக்கணக்கானோர் அபாயத்தின் நிழலில் வாழ்கின்றனர். இதற்கு வலுவான ஒருங்கிணைப்பும் மனிதநேய ஒத்துழைப்பும் அவசியம்,” என்றார்.

இறுதியாக, “நமது எதிர்காலத்தை ஒன்றாக வழிநடத்துதல்” என்ற இந்த ஆண்டுக்கான ஆசியான் கருப்பொருள், உலகளாவிய அறைகூவல்களுக்கு மத்தியில் ஒற்றுமையையும் உறுதியையும் பிரதிபலிக்கும் காலத்திற்கேற்ற முழக்கமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset