நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறுவர் பாலியல் வன்கொடுமை: அரசின் தண்டனை சட்டம் வலிமையாக உள்ளதா?

கோலாலம்பூர்:

மக்களவையில் முன்பு வெளியிடப்பட்ட அதிர்ச்சி தரும் அறிக்கையின்படி, 2023 முதல் அக்டோபர் 2025 வரையிலான காலப்பகுதியில், 18 வயதுக்குட்பட்ட சிறார்களை உள்ளடக்கிய மொத்தம் 3,093 பாலியல் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த புள்ளிவிவரங்கள், நாட்டின் மனசாட்சியையே உலுக்கும் அளவுக்கு கவலைக்கிடமானதாகக் கருதப்படுகின்றன.

அந்த எண்ணிக்கையில், 2023 ஆம் ஆண்டில் மட்டும் 1,760 வழக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டில் 1,041 வழக்குகளும், 2025 ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலப்பகுதியில் 892 வழக்குகளும் பதிவாகியுள்ளன. ஒவ்வொரு எண்ணிக்கைக்கும் பின்னாலும், சிதைந்த சிறுவயது வாழ்க்கைகளும் அழுகையால் நிரம்பிய குடும்பங்களும் மறைந்திருப்பது வேதனையூட்டும் உண்மையாகும்.

அரச மலேசிய போலிஸ் படை (பி.டி.ஆர்.எம்) வெளியிட்ட தகவல்களும் அதிர்ச்சியை மேலும் தீவிரப்படுத்துகின்றன. 2023 ஆம் ஆண்டில் மட்டும் குழந்தைகள் மீதான 5,401 பாலியல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 2024 ஏப்ரல் மாதம் வரை 2,059 வழக்குகள் பதிவாகியிருப்பது, இந்த அரக்கச் செயல் சமூகத்தில் வேகமாக பரவி வருவதை வெளிப்படையாகக் காட்டுகிறது.

இதனுடன், உள்துறை அமைச்சு (கே.டி.என்.) வெளியிட்ட தகவலின்படி, 2020 முதல் 2024 வரை குழந்தைகளுக்கான ஆபாசப் படங்களை உருவாக்குதல், பரப்புதல் தொடர்பாக 238 வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த குற்றச்செயல்கள் கணிசமாக அதிகரித்திருப்பது, டிஜிட்டல் உலகம் குழந்தைகளை விழுங்கும் அபாயகரமான கண்ணியாக மாறி வருவதை உணர்த்துகிறது.

இதுபோன்ற மனிதாபிமானமற்ற குற்றங்களை அடக்குவதற்காக, குழந்தைத் தீண்டல், சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில் தண்டனைச் சட்டம், 2017 ஆம் ஆண்டின் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் சட்டத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற அடிப்படை வழக்கறிஞர் டான் ஸ்ரீ முஹம்மத் துசுகி மொக்தாரின் நிலைப்பாடு, மிகவும் சரியானதோடு பாராட்டத்தக்க நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த அணுகுமுறை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை இனி சாதாரண குற்றங்களாக அல்லாமல், நாட்டின் எதிர்காலத்தை விழுங்கும் பேராபத்தாகக் கருதி கடுமையாக எதிர்கொள்ள வேண்டும் என்ற அரசின் உறுதியை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, எல்லையற்ற சமூக ஊடகங்களும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களும் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பாலியல் வேட்டையாளர்கள் குழந்தைகளைக் குறிவைக்கும் புதிய வழிகளை உருவாக்கி வருகின்றனர்.

இதற்கு முன்பு, இணையவழி பாலியல் சுரண்டல் தொடர்பான பல வழக்குகள், 1998 ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் கீழ், குறிப்பாக பிரிவு 233-ன் கீழ் விசாரிக்கப்பட்டன. ஆனால், அந்தச் சட்டம் முதலில் தொலைத்தொடர்பு, தகவல் பரிமாற்ற துறைகளை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டது; குழந்தைகளை சீரழிக்கும் கொடூரமான பாலியல் குற்றங்களை அடக்குவதற்காக அல்ல.

மேலும், அந்தச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் அதிகபட்ச 50,000 ரிங்கிட் அபராதம் அல்லது ஓராண்டு சிறைத்தண்டனை, பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனுபவிக்கும் மன உளைச்சல், வாழ்நாள் முழுவதும் தொடரும் பயம், உளவியல் சிதைவுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானதாகக் கருதப்படுகிறது. இத்தகைய மென்மையான தண்டனைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கத் தவறுவதோடு மட்டுமல்லாமல், குற்றவாளிகளுக்கு அச்சமூட்டும் தடுப்புச் சக்தியாகவும் அமையவில்லை.

உடல் தொடுதல் இல்லாத இணையவழி பாலியல் துஷ்பிரயோகங்கள், குழந்தைகள் தொடர்பான ஆபாசப் பதிவுகளின் அதிகரிப்பு, பாலியல் வேட்டையாளர்கள் டிஜிட்டல் தளங்களை எவ்வாறு கொடூரமாக பயன்படுத்துகின்றனர் என்பதற்கான நேரடி சான்றாகும். சமூக ஊடகங்கள், இணைய விளையாட்டுகள், தகவல் தொடர்பு செயலிகள் வழியாக, நிரபராத குழந்தைகள் மிக எளிதில் வலையில் சிக்குகின்றனர்.

எனவே, இந்த இரண்டு சட்டங்களையும் பயன்படுத்தி கடுமையான வழக்குத் தொடர்வு மேற்கொள்ளப்படுவது, “குழந்தைத் தீண்டல் குற்றங்களுக்கு மலேசியாவில் எந்தவித சமரசமும் இல்லை” என்ற உறுதியான எச்சரிக்கையை சமூகத்திற்கு அனுப்புகிறது.

இந்தச் சட்டங்கள், குழந்தை நட்பு நீதிமன்ற நடைமுறைகள், வீடியோ இணைப்பு வழியாக சாட்சியம் அளிக்கும் வசதி போன்ற பாதுகாப்பு அம்சங்கள் மூலம், பாதிக்கப்பட்ட சிறார்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் குற்றவாளிகள், குழந்தைகள் குற்றவாளிகள் பதிவேட்டில் சேர்க்கப்படுவார்கள். இது, நீண்டகால கண்காணிப்பு, சமூக பாதுகாப்பிற்கான முக்கியமான கட்டுப்பாட்டு கருவியாகக் கருதப்படுகிறது.

சட்ட ரீதியாகப் பார்க்கும்போது, கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 145(3) கீழ், பொதுநலனுக்காக மிகச் சரியான குற்றச்சாட்டுகளைத் தீர்மானிக்கும் அடிப்படை வழக்கறிஞரின் அதிகாரத்தை ஆதரிப்பது அவசியமானதாகும்.

குழந்தைத் தீண்டல் என்பது வெறும் ஒழுக்கக்கேடான குற்றம் மட்டுமல்ல, மனிதநேயத்தையே தலைகுனியச் செய்யும் அருவருப்பான, மிருகத்தனமான செயல். பாதுகாப்பு தேவைப்படும் பிஞ்சு உயிர்களை இலக்காகக் கொள்ளும் இந்தக் கொடூரம், சமூகத்தில் வேரூன்றுவதற்கு முன்பே இரும்புக்கரத்தால் ஒடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் ஒருமித்த குரலாக மாறியுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset