நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய இந்திய முஸ்லிம்களை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது: பிரியாவிடை நிகழ்ச்சியில் இந்தியத் தூதர் பி என் ரெட்டி

பூச்சோங்:

மலேசியாவுக்கான இந்தியத் தூதர் பி என் ரெட்டிக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி முக்மின் அமைப்பின் சார்பில் இன்று நடைபெற்றது.

பி என் ரெட்டி தனது உரையில், நான் இரண்டு முறை மலேசியாவுக்கான தூதராக இருந்துள்ளேன். ஒரு முறை இந்தோனேசியாவிற்கும், ஒரு முறை லாவோசிலும் தூதராக இருந்துள்ளேன். ஆசிய பசிபிக் வட்டாரத்தில் மிகச் சிறந்த மக்களுடன் நான் பணியாற்றிய மகிழ்ச்சியோடு விடைபெறுகிறேன். 

குறிப்பாக முக்மின் அமைப்பின் இடைக்காலத் தலைவர் டத்தோ வீரா ஷாகுல் ஹமீதுடன் நான் நெருக்கமான நட்பில் இருந்தேன். அவர் ஹெச் ஆர் டி கோர்ப்பின் தலைமை செயலதிகாரியாக இருப்பதற்கும் முன்பிருந்தே நான் அவரை அறிவேன். அவரது குடும்பத்தினரையும் நான் அறிவேன். மிக நல்ல மனிதர் அவர். நாட்டின் பிரதமர் முதல் எல்லாப் பிரமுகர்களும் அவர் இல்லத்திற்கு இயல்பாக வந்து செல்வதை நான் பார்த்திருக்கிறேன்.

மலேசியாவில் உள்ள இந்திய முஸ்லிம்கள் இந்தியத் தூதரகத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளனர். குறிப்பாக, பெரஸ்மா எனும் மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்கொண்ட தொழிலாளர் பிரச்சினைகளை தூதரகத்துடன் இணைந்து தீர்த்தனர்.

அதேபோல் இந்திய நகை வணிகர்கள், பொற்கொல்லர்கள் சங்கத்தினரும் இந்தியத் தூதரகத்துடன் நெருக்கமான தொடர்பு வைத்துள்ளனர்.

நூற்றாண்டு விழா கண்ட பினாங்கில் உள்ள லீகா முஸ்லிம் அமைப்பினரையும் சந்தித்துள்ளேன். அவர்களது நெடிய வரலாறு என்னை பிரம்மிக்க வைத்தது. பினாங்கில் உள்ள இந்திய வம்சாவளி முஸ்லிம்களின் ஓ சி ஐ அட்டை பிரச்சினைகளை நாங்கள் தீர்த்து வைத்துள்ளோம்.

மேலும் மலேசியாவின் அடையாளமாக இருக்கின்ற நாசி கண்டார் இந்திய முஸ்லிம்களுக்குரியது என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். 

நான் எங்கு பணி செய்தாலும் அந்த நாட்டு மக்களோடு நெருக்கமாக பழகுவேன். அதுபோல்தான் இங்கும் இருந்தேன்.

எனது மாநிலத்தைச் சேர்ந்த நண்பர் பேராசிரியர் டாக்டர் மும்தாஸ் அலி மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். அவர் என்னிடம் இந்தியாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் இங்கு பயில்கின்றனர் என்று கூறியுள்ளார். ஆக, மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் கல்வித் துறையில் நெருக்கமான இணக்கம் நிலவுகிறது.

இந்த அருமையான ஏற்பாட்டை செய்த முக்மின் அமைப்புக்கும் இங்கு கலந்துகொள்ள வருகை தந்துள்ள அனைத்து அமைப்பினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பி என் ரெட்டி தனது உரையை நிகழ்த்தினார். 

மிம்காய்ன் தலைவர் டத்தோ அப்துல் ஹமீத், டத்தோ மொஹ்சின், டத்தோ ஸ்ரீ ஷேக் அக்மல், டத்தோ சிராஜ்தீன், ஹாஜி புர்ஹான், டத்தோ எம் இசட் கனி, டத்தோ காசிம் அலியா, டத்தோ வீரா நைனா சுல்தான், டத்தோ ஹபீப், எம்.எம்.ஒய்.சி ரிஃபாய், அஸ்ரின், அஸ்மி, ஹாஜி புஹாரி, டத்தோ ஜமீல், மன்னான் உட்பட பல முக்கியப் பிரமுகர்கள் இந்த பிரியாவிடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset