செய்திகள் மலேசியா
ஜாஹித் வழக்கில் புதிய திருப்பம்: டி.என்.ஏ.ஏ.-வை சவால் செய்ய மலேசிய பார் அமைப்புக்கு நீதிமன்றம் அனுமதி
புத்ராஜெயா:
டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடியின் யயாசான் அகல்புடி ஊழல் வழக்கில் வழங்கப்பட்ட Discharge Not Amounting to Acquittal (DNAA) தீர்ப்பை எதிர்த்து சட்ட ரீதியான சவாலைத் தொடங்க மலேசிய பார் அமைப்புக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று முக்கிய அனுமதி வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு, நாட்டின் சட்ட, அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு தலைமை வகித்த நீதிபதி டத்தோ ஃபைசா ஜமாலுடின், “மலேசிய பார் தாக்கல் செய்த நீதிப் பரிசீலனை மனுவில் விசாரணைக்குத் தகுந்த முக்கிய சட்ட, பொது நலக் கேள்விகள் உள்ளன” எனத் தெரிவித்தார். இதன் மூலம், வழக்கு மேலதிக விசாரணைக்காக உயர் நீதிமன்றத்திற்கு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் மையப்புள்ளி, 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் சட்டத்துறைத் தலைவர் எடுத்த டி.என்.ஏ.ஏ. முடிவாகும். ஜாஹித்துக்கு எதிராக இருந்த 47 ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடராமல் விடுவிக்க சட்டத்துறைத் தலைவர் முடிவு செய்திருந்தார். இதற்கு எதிராக மலேசிய பார் அமைப்பு நீதிமன்றத்தில் சவால் விடுத்தது. ஆரம்பத்தில் உயர் நீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்த போதிலும், இன்றைய மேல்முறையீட்டு தீர்ப்பு மூலம் அந்தத் தடையை பார் அமைப்பு முறியடித்துள்ளது.
அரசியலமைப்பின் பிரிவு 145(3)-ன் கீழ், குற்றவியல் வழக்குகளைத் தொடரவோ அல்லது நிறுத்தவோ சட்டத்துறைத் தலைவருக்குப் பரந்த அதிகாரம் இருப்பதாக நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. இருப்பினும், அந்த அதிகாரம் “முழுமையானதோ அல்லது கட்டுப்பாடற்றதோ அல்ல” என்றும், “அரிதான, விசேஷமான சூழ்நிலைகளில்” நீதிமன்றம் அதை மறுபரிசீலனை செய்ய முடியும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.
53 நாட்கள் நீடித்த விசாரணை, 99 வழக்குத் தரப்பு சாட்சிகள், 15 பாதுகாப்பு தரப்பு சாட்சிகள், ஊழல் குற்றச்சாட்டுகளின் தீவிரம் ஆகியவை இந்த வழக்கை “பொது நலனுடன் தொடர்புடைய விதிவிலக்கான வழக்காக” மாற்றுவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. எனவே, மலேசிய பார் முன்வைத்த வாதங்கள் அற்பமானவை அல்ல என்றும், அவை விரிவான நீதிமன்ற விசாரணைக்கு உரியவை என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
இதற்கிடையில், ஜாஹித் தாக்கல் செய்துள்ள முழுமையான விடுதலை மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் அடுத்த வாரம் வழங்கவுள்ளது. டி.என்.ஏ.ஏ. என்பது தற்காலிக விடுதலையாகும்; அதே குற்றச்சாட்டுகள் மீண்டும் தாக்கல் செய்யப்படலாம். ஆனால் முழுமையான விடுதலை வழங்கப்பட்டால், எதிர்காலத்தில் அதே குற்றச்சாட்டுகளை மீண்டும் பதிவு செய்ய முடியாது என்பதால், இந்த தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மலேசிய பார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டத்தோ அம்பிகா ஸ்ரீநிவாசன், சட்டத்துறைத் தலைவர் எடுத்த டி.என்.ஏ.ஏ., “மேலும் நடவடிக்கை இல்லை” (NFA) என்ற முடிவுகளுக்கு எதிராக தனித்தனி நீதிப் பரிசீலனை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதனால், ஜாஹித்தின் விடுதலை மனு மீதான தீர்ப்பை ஒத்திவைக்க நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இன்றைய தீர்ப்பு, ஜாஹித் குற்றவாளியா இல்லையா என்பதை தீர்மானிப்பதல்ல. ஆனால், நாட்டின் சட்ட அமலாக்க அமைப்புகள், சட்டத்துறைத் தலைவரின் அதிகாரப் பயன்பாடு நீதிமன்ற கண்காணிப்புக்கு உட்படுமா என்ற மிகப் பெரிய அரசியலமைப்பு விவாதத்துக்குப் புதிய கதவைத் திறந்துள்ளதாக சட்ட வட்டாரங்கள் கருதுகின்றன.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
