செய்திகள் மலேசியா
உயிரியற் பல்வகைமை முதல் அரிய பூமி தொழில் வரை: பசுமை எதிர்காலத்திற்காக கைகோர்க்கும் மலேசியா – இந்தியா
புத்ராஜெயா:
உயிரியற் பல்வகைமைப் பாதுகாப்பு, அரிய பூமி மூலப்பொருட்கள் (REE), பசுமைத் தொழில்நுட்பத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல மலேசியாவும் இந்தியாவும் உறுதிபூண்டுள்ளன.
இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு (என்.ஆர்.ஈ.எஸ்.) மேற்கொண்ட அதிகாரப்பூர்வ சந்திப்பில், மலேசியாவுக்கான இந்திய உயர் ஆணையர் பி.என். ரெட்டி தலைமையிலான இந்திய பிரதிநிதிகள் குழுவை, என்.ஆர்.ஈ.எஸ். துணை அமைச்சர் சையது இப்ராஹிம் சையது நோ வரவேற்று முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார்.
சர்வதேச பெரிய பூனைகள் கூட்டமைப்பின் (ஐ.பி.சி.ஏ.) நிறுவன உறுப்பினராக மலேசியா வகிக்கும் தீவிர பங்கு, இந்த உயர்மட்ட சந்திப்பின் முக்கிய அம்சமாக அமைந்தது.
உயிரியற் பல்வகைமை பாதுகாப்பில், அமைச்சரின் 100 நாள் முக்கிய செயல்திறன் குறியீட்டு இலக்குகளை 100 சதவீதம் நிறைவேற்றியிருப்பது, மலேசியாவின் அர்ப்பணிப்பை உலக அரங்கில் வலுவாக எடுத்துக்காட்டுவதாக என்.ஆர்.ஈ.எஸ். தெரிவித்துள்ளது.
“கசானா ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம், வனவிலங்கு கடத்தல்களுக்கு எதிராக மலேசியா கடும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. 2019 முதல் 413.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பறிமுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என்று அமைச்சு குறிப்பிட்டது.
மலாயாப் புலி உள்ளிட்ட அரிய பெரிய பூனை இனங்களைப் பாதுகாக்கும் நோக்கில், 2026 ஜூன் 1ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் முதல் ஐ.பி.சி.ஏ. உச்சிமாநாட்டில் மலேசியா பங்கேற்கவுள்ளது. அங்கு ‘டெல்லி பிரகடனம்’ இறுதிசெய்யப்படவுள்ளது.
இதனுடன், அரிய பூமி மூலப்பொருட்கள் துறையில் இந்திய அரிய பூமி நிறுவனம் உடன் மூலோபாய ஒத்துழைப்பை உருவாக்க மலேசியா ஆர்வம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் செயல்பாட்டு முறைமைகள், நடுத்தர செயலாக்க தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு, மலேசியாவின் அரிய பூமி மூலப்பொருட்கள் துறை சார் தொழிலை உயர்மதிப்பு, நிலையான தொழில்துறையாக மாற்றும் நோக்கமே இதன் பின்னணியாகும்.
“இந்த ஒத்துழைப்பு தொழில்நுட்ப பரிமாற்றம், உள்ளூர் நிபுணர்களின் திறன் மேம்பாடு, நிலையான தொழில்துறை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்,” என்று என்.ஆர்.ஈ.எஸ். தெரிவித்தது.
மேலும், இந்த ஆண்டு அக்டோபர் 7 முதல் 9 வரை நடைபெறவுள்ள சர்வதேச கிரீன்டெக், சுற்றுச்சூழல் தயாரிப்புகள் கண்காட்சி, மாநாடு (ஐஜெம்) நிகழ்வில் பங்கேற்குமாறு இந்திய பிரதிநிதிகள் குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
“தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பசுமை தொழில்நுட்ப தளமான ஐஜெம், குறைந்த கார்பன் பொருளாதாரம், வட்டப் பொருளாதார முதலீடுகளை முன்னெடுக்க இரு நாடுகளுக்கும் அபூர்வ வாய்ப்பாக அமையும்,” என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பில், உயிரியல் வளங்களின் அணுகல், பயன் பகிர்வு கட்டமைப்பு, தேசிய உயிரியற் பல்வகைமை ஆணையத்துடனான ஒத்துழைப்பு, இந்த ஜூனில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள தேசிய காலநிலை மாற்ற மசோதா தொடர்பான முன்னேற்றங்களும் விவாதிக்கப்பட்டன.
பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வலுவான கனிம விநியோகச் சங்கிலிகளை உறுதிசெய்யும் நோக்கில், மலேசியாவும் இந்தியாவும் தொடர்ந்து உறுதியுடன் செயல்படவுள்ளதாக என்.ஆர்.ஈ.எஸ். வலியுறுத்தியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
