செய்திகள் மலேசியா
ஆசிய நாணயச் சந்தையில் புதிய வரலாறு: வலுவடையும் மலேசிய ரிங்கிட்
கோலாலம்பூர்:
2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஏப்ரல் 28 வரை, அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 2.64 விழுக்காடு உயர்ந்துள்ளது.
இதன் மூலம் ஆசியாவிலேயே மிகச்சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய நாணயமாக ரிங்கிட் உருவெடுத்துள்ளது. 2.23 விழுக்காடு வளர்ச்சியுடன் சீனா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த அபார வளர்ச்சிக்கு மலேசியாவின் வலுவான பொருளாதார அடித்தளமே காரணம் எனப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
மலேசியாவின் மார்ச் மாத வர்த்தகப் புள்ளிவிவரங்கள் 9.3 விழுக்காடு உயர்ந்து RM27,300 கோடி ரிங்கிட்டை எட்டியுள்ளன. ஏற்றுமதி 8.3 விழுக்காடும், இறக்குமதி 10.4 விழுக்காடும் அதிகரித்துள்ளன.
2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 5 விழுக்காட்டைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானில் நிலவும் பதற்றத்தால் எண்ணெய் விலை உயர்ந்தாலும், அதனைத் தாங்கும் வலுவான பொருளாதார நிலையில் மலேசியா இருப்பதாக வங்கி முஅமலாத் தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் முஹம்மத் அஃப்ஸானிஸாம் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் இந்த முன்னேற்றத்தைச் சர்வதேச நாணய நிதியமும் (IMF) அங்கீகரித்துள்ளது. மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி முன்னறிவிப்பை 4.3 விழுக்காட்டில் இருந்து 4.7 விழுக்காடாக அந்த அமைப்பு உயர்த்தியுள்ளது.
நாட்டின் அரசியல் நிலைத்தன்மை , வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து, மத்திய வங்கியின் சரியான வழிகாட்டுதல் ஆகியவற்றின் மீதான உலகளாவிய நம்பிக்கையையே இது காட்டுகிறது என நிதியமைச்சரின் அரசியல் செயலாளர் முஹம்மத் கமில் அப்துல் முனிம் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் வாரத்தில் அமெரிக்காவின் வேலைவாய்ப்புத் தரவுகளைப் பொறுத்து ரிங்கிட்டின் மதிப்பில் சிறு மாற்றங்கள் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஆசிய அண்டை நாடுகளின் நாணயங்களுடன் ஒப்பிடுகையில் ரிங்கிட் மிகவும் வலுவாக உள்ளது. ரிங்கிட் வலுவடைவதால் இறக்குமதிப் பொருட்களின் விலை குறையும் என்றும், பொதுமக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2024-ஆம் ஆண்டில் சந்தித்த பெரும் வீழ்ச்சிக்குப் பிறகு, மலேசிய ரிங்கிட் தற்போது கண்டுள்ள இந்த மீட்சி நாட்டின் பொருளாதார எதிர்காலத்திற்கு ஒரு நல்வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 6, 2026, 4:53 pm
மெங்காழும் தீவு அருகே படகு விபத்து: கடலில் விழுந்த வாலிபரைத் தேடும் பணி தீவிரம்
May 6, 2026, 3:46 pm
