செய்திகள் மலேசியா
கல்வி சேமிப்பில் 11 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சம்: எஸ்.எஸ்.பி.என் சேமிப்பிற்கு 4.1% டிவிடெண்ட்
கோலாலம்பூர்:
தேசிய உயர்கல்வி நிதி நிறுவனம் (பி.டி.பி.டி.என்), 2025ஆம் ஆண்டிற்கான தேசிய கல்விச் சேமிப்புத் திட்டமான சிம்பான் எஸ்.எஸ்.பி.என்-க்கு 4.1 சதவீத ஈவுத்தொகையை அறிவித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் பதிவான மிக உயர்ந்த விகிதம் இதுவாகும்.
இந்த ஈவுத்தொகை வழங்கலுக்காக 505.68 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் 439.87 மில்லியனை விட அதிகமாகும். இதன் மூலம் 6.07 மில்லியன் வைப்பாளர் கணக்குகள் பயனடைவதாக பி.டி.பி.டி.என் தெரிவித்துள்ளது.
உயர்ந்த ஈவுத்தொகை விகிதம், நிதி மேலாண்மையில் நிறுவனத்தின் திறன், நல்ல ஆளுகை, நேர்மை, மூலோபாய அணுகுமுறையை பிரதிபலிக்கிறது என்று பி.டி.பி.டி.என் தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிசா அப்துல் ரஹீம் தெரிவித்துள்ளார். வைப்பாளர்களுக்கு அதிகபட்ச வருமானம் கிடைக்கச் செய்வதே இதன் நோக்கமெனவும் அவர் குறிப்பிட்டார்.
2025ஆம் ஆண்டில், சிம்பான் எஸ்.எஸ்.பி.என்-க்கு கிடைத்த மொத்த வைப்பு 3.3 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது. இது 2024ஆம் ஆண்டின் 3.17 பில்லியனுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பைக் காட்டுகிறது. மேலும், 500,000க்கும் மேற்பட்ட புதிய கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், 2025 டிசம்பர் 31ஆம் தேதியுடன் மொத்த சேமிப்பு 23.88 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.
இந்த 4.1% ஈவுத்தொகை அறிவிப்பு, 2004ஆம் ஆண்டு திட்டம் அறிமுகமானதிலிருந்து மொத்தமாக வழங்கப்பட்ட ஈவுத்தொகையை 2.63 பில்லியனாக உயர்த்தியுள்ளது. 2024ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 4.05% விகிதத்தை விட இது அதிகமாகும்.
மேலும், ஷரியா இணக்கமான குறுகிய, நீண்டகால முதலீட்டு உத்திகள், குறிப்பாக பணச் சந்தைகள், உள்ளூர் சுகுக் முதலீடுகள், மூலதனப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு போட்டித்தன்மை வாய்ந்த வருமானத்தையும் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். திறம்பட்ட அபாய மேலாண்மை, திட்டமிட்ட முதலீட்டு தேர்வுகளும் இதற்கு துணைபுரிந்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், 2025ஆம் ஆண்டு முழுவதும் மலேசிய மத்திய வங்கியின் அடிப்படை வட்டி விகிதமான (OPR) 2.75% உடன் ஒப்பிடுகையில், இந்த ஈவுத்தொகை போட்டித்தன்மை வாய்ந்ததாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஈவுத்தொகை தொகை, வைப்பாளர்களின் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும். நாளை முதல் MyPTPTN செயலி மூலம் விவரங்களைச் சரிபார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பி.டி.பி.டி.என்-க்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிருக்கு நோர்லிசா நன்றி தெரிவித்தார்.
சிம்பான் எஸ்.எஸ்.பி.என் திட்டமானது ஆண்டுக்கு 8,000 ரிங்கிட் வரை வரிவிலக்கு, இலவச தகாஃபுல் பாதுகாப்பு, பொருத்தமான மானியம், அரசாங்க உத்தரவாதம் போன்ற பல சலுகைகளுடன் பொதுமக்களின் நம்பிக்கையை தொடர்ந்து பெற்றுவருகிறது.
அதேவேளை, மாதாந்திர வருமானம் 4,000 முதல் 6,000 ரிங்கிட் வரை உள்ள குடும்பங்களுக்கு மானிய தகுதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பமும் 5,000 ரிங்கிட் வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிம்பான் எஸ்.எஸ்.பி.என் 2026 பரிசுப் பிரச்சாரத்தின் கீழ், 954 வெற்றியாளர்களுக்கு மொத்தம் 1.4 மில்லியன் ரிங்கிட் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 6, 2026, 5:14 pm
ஆசிய நாணயச் சந்தையில் புதிய வரலாறு: வலுவடையும் மலேசிய ரிங்கிட்
May 6, 2026, 4:53 pm
மெங்காழும் தீவு அருகே படகு விபத்து: கடலில் விழுந்த வாலிபரைத் தேடும் பணி தீவிரம்
May 6, 2026, 3:46 pm
