செய்திகள் மலேசியா
மருந்து விநியோக நெருக்கடியைச் சமாளிக்க கே.கே.எம். சிறப்புப் பணிக்குழுவை அமைக்கிறது
கோலாலம்பூர்:
உலகளாவிய விநியோகச் சங்கிலியின் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்வதில், நாட்டின் தயார்நிலையை வலுப்படுத்துவதற்காக, மருந்து, மருத்துவ சாதன பாதுகாப்புக்கான சிறப்புப் பணிக்குழுவை, முக்கிய கட்டுப்பாட்டு மையமாக சுகாதார அமைச்சு (கே.கே.எம்.) நிறுவியுள்ளது.
மூலப் பொருட்களின் விநியோக நெருக்கடி, எரிசக்தி நெருக்கடி,, மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்தைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் அதிகரித்து வரும் தளவாடச் செலவுகள் உள்ளிட்ட உலகளாவிய மாறும் சவால்களைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கேஃப்லி அஹ்மத் கூறினார்.
அந்தக் குழு, தரவுகளை நிகழ்நேரத்தில் கண்காணிப்பதோடு, நாட்டின் விநியோகம் நிலையாக இருப்பதை உறுதி செய்வதற்காக, சர்வதேச சந்தைகளில் இருந்து மருந்துகளைப் பெறும் ஆதாரங்களை பன்முகப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
"அதே நேரத்தில், முக்கியமானவை என வகைப்படுத்தப்பட்ட மருந்துகளுக்கான முன்னணிப் பங்கு இருப்பு, எப்போதும் வலுவாக இருப்பதையும், நோயாளிகளைப் பாதுகாப்பதற்காக, 60 நாட்களுக்கும் மேலாக தாக்குப்பிடிக்கும் திறன் கொண்டிருப்பதையும் நாங்கள் உறுதி செய்கிறோம்" என்று அவர் நேற்று பேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு பதிவில் கூறினார்.
அடித்தள மட்டத்தில் சுகாதாரப் பிரச்சினைகளை முன்னெடுப்பதில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒருங்கிணைப்பதற்காக, தான் தலைமை வகித்த 'சுகாதார அமைச்சின் நண்பர்கள்' (Friends of Ministry - FoM) விளக்க அமர்வில் விவாதிக்கப்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்றாகும் என்று ஸுல்கேஃப்லி தெரிவித்தார்.
அந்தச் சந்திப்பில், நாட்டின் மருந்து, மருத்துவ சாதன விநியோகச் சங்கிலி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கான மடானி அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பை அவர் வலியுறுத்தினார்.
மருந்து விநியோகத்தின் தொடர்ச்சியின் நெருக்கடியை செயலூக்கமாக நிர்வகிப்பதற்காக, கே.கே.எம். ஒரு ஆரம்ப எச்சரிக்கை வழிமுறையை செயல்படுத்தியுள்ளதாகவும், ஜூலை 2026-க்குள், சப்ளையர்கள் ஏதேனும் சாத்தியமான விநியோகப் பற்றாக்குறையைக் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு முன்னதாகப் புகாரளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
"மருத்துவ சாதன விநியோகத்தைப் பொறுத்தவரை, மருத்துவ சாதன ஆணையம் (எம்.டி.ஏ.) சீனாவில் உள்ள அதிகாரிகளுடன் ஒரு மூலோபாய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உற்பத்திக்கான முக்கியமான மூலப் பொருட்களான ரெசின், நாஃப்தா போன்றவற்றின் விநியோகத்தை நிலைப்படுத்துவதற்காகும். இது, உள்ளூர் உற்பத்தியாளர்கள் தடையின்றி செயல்பட அனுமதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அவசரகால மருத்துவ உபகரணங்களை விரைவாக நுழைப்பதற்காக 'சிறப்பு அணுகல் பாதை' (Special Access Pathway) வழங்கப்படுகிறது. அறுவை சிகிச்சை அறைகள், மருத்துவமனைகளின் செயல்பாடுகள் சுமூகமாக இருப்பதை உறுதி செய்வதற்காகும்" என்றார் அவர்.
எனவே, உலகளாவிய அதிர்ச்சிகளால் நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, அனைத்து அரசாங்க அணுகுமுறை மூலம், சுகாதார அமைப்பின் பின்னடைவை கே.கே.எம். தொடர்ந்து வலுப்படுத்தும் என்று ஸுல்கேஃப்லி கூறினார்.
"ஒவ்வொரு மூலோபாயத் திட்டமும், களத்தில் விரைவான, ஒழுங்கான நடவடிக்கையாக மொழிபெயர்க்கப்படுவதை உறுதி செய்வதற்காகும். வருங்கால உலகளாவிய அதிர்ச்சிகள் எதுவும் நோயாளிகளைப் பாதிக்காமல் இருப்பதற்காகும்" என்றார் அவர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 5, 2026, 1:14 pm
தர்ம மடானி திட்டம்; ஆலயங்களை சமூக மையங்களாக மாற்றுகிறது: குணராஜ்
May 5, 2026, 1:13 pm
1.1 பில்லியன் ரிங்கிட் அரசுத் திட்ட விசாரணை; மறைப்பதற்கு ஒன்றுமில்லை: ரபிசி
May 5, 2026, 11:28 am
கண்காணிப்புக் கேமராவில் சிக்கிய கொடூரம்: சிறுவர்களை நாய் கூண்டில் அடைத்த பணிப்பெண் கைது
May 5, 2026, 11:25 am
தொழிலாளர் தினக் கொண்டாட்டம் 2026 அதன் இலக்குகளை அடைந்துள்ளது
May 5, 2026, 10:39 am
