நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழிலாளர் தினக் கொண்டாட்டம் 2026 அதன் இலக்குகளை அடைந்துள்ளது

கோலாலம்பூர்:

மூன்று நாட்கள் நடைபெற்ற தொழிலாளர் தினக் கொண்டாட்டம் புக்கிட் ஜாலிலில் உள்ள யூனிஃபை அரங்கில் நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இதில் 30,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட தொழிலாளர் தின மாபெரும் ஒன்றுகூடலுடன் இந்த வருடாந்திரக் கொண்டாட்டம் தொடங்கியது.

இதில் பொது, தனியார், தொழிற்சங்கத் துறைகளைச் சேர்ந்த 15,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்தனர்.

இந்த நிகழ்வின் மூன்று நாட்களிலும், தொழிலாளர் தினக் கொண்டாட்டம் தொழிலாளர்களைப் பாராட்டுவதற்கான ஒரு தளமாகச் செயல்பட்டது மட்டுமல்லாமல், தொழிலாளர்களையும் முதலாளிகளையும் உள்ளடக்கிய, அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு ஒருங்கிணைந்த மையமாகவும் செயல்பட்டது.

இந்தக் கொண்டாட்டத்தில் MyFutureJobs  பிரிமியம் கார்னிவல் ஒரு முக்கிய அங்கமாக விளங்கியது.

இது பல்வேறு முக்கியத் துறைகளை உள்ளடக்கிய, மொத்தம் 10,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்கியது.

சொக்சோவின் MyFutureJobs நடத்திய தொழில்வாய்ப்புத் திருவிழாவில் 2,177 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில், நேரடி வேலை வாய்ப்புப் பொருத்த அமர்வுகள் மூலம் 268 பேர் வெற்றிகரமாக வேலை வாய்ப்புகளைப் பெற்றனர்.

16,000 ரிங்கிட் வரையிலான சம்பள வரம்புடன் 4,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை வழங்கும் 30 நிறுவனங்களின் பங்கேற்பு, தரமான வேலை வாய்ப்புகளுக்கான அணுகலை வலுப்படுத்துகிறது.

தொழிலாளர் தினக் கொண்டாட்டம் என்பது ஒரு வருடாந்திர நிகழ்வு மட்டுமல்ல, பொருளாதார முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் ஒவ்வொரு தனிநபருக்கும் நாடு காட்டும் நன்றியுணர்வின் வெளிப்பாடு என்றும் மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

அதிகரித்து வரும் மாறும், சவாலான பொருளாதாரச் சூழலில், எந்தத் துறை அல்லது வேலை வடிவத்தில் இருந்தாலும், ஒவ்வொரு மலேசியத் தொழிலாளியும் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதையும், வலுவூட்டப்படுவதையும், வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதையும் உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் 2025ஆம் ஆண்டின் தற்காலிகப் பணியாளர்கள் சட்டத்தை அமல்படுத்துதல் மற்றும் கெசுமா செமிகண்டக்டர் அகாடமியை நிறுவுவதன் மூலம் திறன் பயிற்சி, தொழிற்கல்விச் சூழலை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் போன்ற பல்வேறு முன்னெடுப்புகளைச் செயல்படுத்துவதையும் அவர் வலியுறுத்தினார்.

தொழில் வாய்ப்புகள், திறன் மேம்பாடு மற்றும் பணிச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றை உள்ளடக்கிய அறிவுப் பேச்சு அமர்வுகள் அல்லது சிறு உரைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல் தரும் செயல்பாடுகள் இந்தத் திருவிழா முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தொழிலாளர்களின் முழுமையான நல்வாழ்வை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு இணங்க, பணியிடத்தில் பாதுகாப்பு,  ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, உலகத் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார தின கொண்டாட்டம் மே 3 அன்று நடைபெற்றது.

அரசு ஊழியர் அட்டைப் பதிவு, மார்பக,  புரோஸ்டேட் பரிசோதனைகள் போன்ற சுகாதாரப் பரிசோதனைகள், செவித்திறன் சோதனைகள், பல் பரிசோதனைகள், இரத்த தானம்,  தனிப்பட்ட அடையாள ஆவணங்களைப் புதுப்பிப்பதற்கான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலன் சார்ந்த சேவைகள், செயல்பாடுகளுடன் இந்தத் திருவிழா மேலும் களைகட்டியது.

கூடுதலாக, மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்க உதவும் ஒரு முயற்சியாக ரஹ்மா விற்பனை, அக்ரோ மடானி ஆகியவையும் ஊக்கமளிக்கும் வரவேற்பைப் பெற்றன.

இதற்கிடையில், ஒட்டுமொத்த அரசாங்கம் மற்றும் ஒட்டுமொத்தத் தொழில் துறை சார்ந்த அணுகுமுறையின் மூலம் அரசு சேவைகளை வழங்குவதை வலுப்படுத்துவதில், 2026 தொழிலாளர் தினத் திருவிழா தனது நோக்கங்களை வெற்றிகரமாக அடைந்துள்ளதாக மனிதவள அமைச்சு விவரித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset