நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கல்லூரி மாணவி 61 முறை குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம்; மேலும் இருவர் அதிரடியாக கைது

கிளாந்தான்: 

கெட்டரே பகுதியில் உள்ள கம்போங் சிமா வயல்வெளிக்கு அருகே 19 வயது கல்லூரி மாணவி ஒருவரின் சடலம் 61 கத்திக்குத்துக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது என்று கிளாந்தான் மாநில தலைமைப் போலிஸ் அதிகாரி டத்தோ முஹம்மத் யூசோஃப் மாமட் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை 4.40 மணி முதல் இன்று அதிகாலை 2.30 மணி வரை நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், 19 முதல் 66 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்களும், 60 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். 

கைதான நால்வருக்கும் முன்னைய குற்றப் பின்னணி எதுவும் இல்லை என்றும், அவர்களின் சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் உட்கொண்டதற்கான எந்தவொரு தடயமும் இல்லை என்றும் போலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர். 

மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் ஒரு கத்தி, இரண்டு வாகனங்கள், ஆடைகள், கைபேசிகள் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொலைக்கான காரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வரும் வேளையில், இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன் குறைந்தது 12 பிரம்படிகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

கடந்த மே 1-ஆம் தேதி நள்ளிரவு 12.35 மணியளவில் மாணவியின் சடலம் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ராஜா பெரெம்புவான் ஜைனாப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

அந்தப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், மாணவியின் நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்ட பலத்த கத்திக்குத்துக் காயங்களே அவரின் மரணத்திற்குப் பிரதான காரணம் எனத் தெரியவந்துள்ளது. அந்த மாணவி வேறொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு, பின்னர் சடலம் மட்டும் இந்த வயல்வெளிப் பகுதியில் வீசப்பட்டிருக்கலாம் என்று போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset