நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புக்கிட் பிந்தாங் ‘ரெயின் ரேவ்’ விழாவில் பரபரப்பு: கத்தியுடன் வந்த பெண் கைது

கோலாலம்பூர்: 

கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற 'ரெயின் ரேவ் வாட்டர் மியூசிக்’ விழாவின் (Rain Rave Water Music Festival 2026) நிறைவு இரவில், ஆபத்தான ஆயுதத்தை வைத்திருந்த குற்றத்திற்காக உள்ளூர் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைதான 28 வயதுடைய அந்தப் பெண்ணிடம் இருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, மேலதிக விசாரணைக்காக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கோலாலம்பூர் தலைமைப் போலிஸ் அதிகாரி டத்தோ ஃபடில் மார்சூஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

சந்தேக நபர் எதற்காக கத்தியை வைத்திருந்தார், அவரின் நோக்கம் என்ன என்பது குறித்து போலிசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

பொதுமக்கள், நிகழ்ச்சிக்கு வந்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல்களைத் தடுப்பதிலும் காவல்துறை எந்தவொரு சமரசமும் செய்துகொள்ளாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த இசை விழாவின் இறுதி நாளில் மட்டும் சுமார் 30,000 பேர் திரண்டிருந்தனர். இந்த விழாவில் அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி அமைதியான முறையில் நடைபெற்று முடிந்த போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடிய சிலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விழாவின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உச்சகட்ட அளவில் உறுதி செய்வதற்காகக் கோலாலம்பூர், புக்கிட் அமான் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 500 போலிஸ் அதிகாரிகள் ஒவ்வொரு இரவும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

நிகழ்ச்சி அமைதியான முறையில் நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்குக் காவல்துறை தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset