நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கில் பரபரப்பு: ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற நபர் வெப்பத் தாக்கத்தால் மரணம்

ஜார்ஜ்டவுன்: 

பினாங்கில் நிலவி வரும் கடும் வெயிலின் காரணமாக, இந்த ஆண்டின் முதல் வெப்பத் தாக்குதல் மரணம் பதிவாகியுள்ளதாகப் பினாங்கு மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற 30 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட 42 வயதுடைய உள்ளூர் நபர் ஒருவர், வெப்பத் தாக்கத்தால் உயிரிழந்துள்ளார்.

காலை 6.30 மணிக்குத் தொடங்கி, காடுகள், மலைப்பாங்கான பாதைகளில் நடைபெற்ற இந்த ஓட்டப்பந்தயத்தின் போது, மாலை 4 மணியளவில் இலக்குக் கோட்டிற்கு அருகில் அவர் மயங்கி விழுந்துள்ளார். 

அங்கிருந்த மருத்துவக் குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்து, பினாங்கு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 26-ஆம் தேதி அதிகாலை 2.08 மணிக்கு அவர் உயிரிழந்தார்.

கடும் வெப்பத் தாக்கத்தால் ஏற்பட்ட தசைச் சிதைவு, உடல் உறுப்புகள் செயலிழந்ததே அவரது மரணத்திற்குப் பிரதான காரணம் என மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உயிரிழந்த நபரின் குடும்பத்தாருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள சுகாதாரத்துறை, பொதுமக்கள், விளையாட்டு ஆர்வலர்கள் வெளியில் செல்லும்போது தங்களின் உடல் நலனிலும் தற்போதைய வானிலையிலும் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பொதுமக்கள் வெளியில் அதிக நேரம் இருப்பதைத் தவிர்க்குமாறும், உடலின் நீர்ச்சத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் தொடர்ச்சியாகத் தூய்மையான நீரைக் குடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

பொதுமக்கள் தற்போதைய வானிலை நிலவரங்களைத் தெரிந்துகொள்ள மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தையும், தற்காப்பு நடவடிக்கைகளை அறிந்துகொள்ள மலேசிய சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையும் நாடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset