நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வறட்சியின் பிடியில் கோலோக் ஆறு: கிளாந்தானில் நீர்மட்டம் அபாயகரமாகக் குறைவு

ரந்தாவ் பஞ்சாங்:

கிளாந்தான் மாநிலத்தில் நிலவி வரும் நீண்ட கால வறண்ட வானிலை காரணமாக, மலேசியா, தாய்லாந்து நாடுகளைப் பிரிக்கும் கோலோக் ஆற்றின் நீர்மட்டம் வழக்கத்தை விடக் கணிசமாகக் குறைந்துள்ளது. 

கோலோக் ஆற்றின் இயல்பான நீர்மட்டம் 5 மீட்டராக இருக்க வேண்டிய நிலையில், தற்போது அது 3.08 மீட்டராகச் சரிவடைந்துள்ளது. அதாவது, இயல்பை விட 1.92 மீட்டர் நீர்மட்டம் குறைந்துள்ளதால் அப்பகுதியில் வறட்சிச் சூழல் நிலவுகிறது என நீர்ப்பாசனம், வடிகால் துறையின் (JPS) மாநில இயக்குநர் டாக்டர் சித்தி ஃபைரஸ் ஜகாரியா தெரிவித்துள்ளார்.

இதேபோல், ரந்தாவ் பாஞ்சாங்கில் உள்ள புக்கிட் குவோங் அணையின் நீர்மட்டமும் கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளது. இந்த அணையின் இயல்பான நீர்மட்டம் 16.76 மீட்டராக இருக்க வேண்டும். 

ஆனால், நேற்று காலை எடுக்கப்பட்ட அளவீட்டின்படி 13.92 மீட்டராகக் பதிவாகியுள்ளது. இது வறட்சி மேலாண்மை நடைமுறையின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 'அபாயகரமான நிலையை' (Critical Level) விடக் குறைவாகும். ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்திற்கு 14 மீட்டர் என்பது மிகக் குறைந்த நீர்மட்டமாகக் கருதப்படுகிறது.

தற்போதைய வறட்சியைக் கையாள்வதற்கும் நீர் ஆதாரங்களை முறையாக நிர்வகிப்பதற்கும் நீர்ப்பாசனத் துறை தீவிரக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

கோலோக் ஆறு அப்பகுதியின் விவசாயத் துறைக்கும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கும் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவதால், நீர்மட்டம் குறைந்து வருவது விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நிலைமையைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset