செய்திகள் மலேசியா
டிஜிட்டல் மயம் சேமிப்பைக் குலைக்கிறதா?
கோலாலம்பூர்:
ஸ்டாம்ப் புத்தகங்கள், தபால் நிலையச் சேமிப்புகள் போன்ற பாரம்பரிய முறைகளிலிருந்து உடனடி QR குறியீடு வழி பணம் செலுத்துதல்களுக்கு மாறியுள்ள நிலையில், மலேசியர்களின் பணப் பழக்கவழக்கங்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் நல்லதா என்ற கேள்விக்கு, அது அவசியம் நேர்மறையானதல்ல என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மலேசியாவின் தலைமை புள்ளியியலாளர் டத்தோஸ்ரீ முஹம்மத் உஸிர் மஹிதின், டிஜிட்டல் பணம் செலுத்துதல்களின் வசதி, சேமிப்பு ஒழுக்கத்தை மெதுவாக பாதித்து வருவதாகத் தெரிவிதாக எச்சரித்துள்ளார்.
மலேசிய புள்ளியியல் துறை வெளியிட்ட தேசிய பரிமாற்றக் கணக்குகள் (NTA) 2022 அறிக்கை வெளியீட்டில் பேசிய அவர், முந்தைய தலைமுறையினர் இளம் வயதிலிருந்தே சேமிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொண்டிருந்ததை நினைவுகூர்ந்தார்.
“நாங்கள் பள்ளியில் இருந்தபோதே சேமிப்பு ஒரு பழக்கமாக இருந்தது. ஆசிரியர்கள் ஸ்டாம்ப் புத்தகங்களை வழங்குவார்கள். செலவழிக்காமல் இருந்த பணத்தை அதில் சேமித்து, பின்னர் தபால் நிலையங்களில் அதை பதிவு செய்தோம்,” என்று அவர் கூறினார்.
“சேமிப்பு என்பது தற்போதைய செலவினத்தைத் தாமதப்படுத்துவதாகும். ஆனால் அதற்கான அடிப்படை நிபந்தனை, பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். பணவீக்கம் அதிகமாக இருந்தால், சேமிப்பின் மதிப்பு குறையும்,” என்றும் அவர் விளக்கினார்.
இருப்பினும், சிறிய அளவிலான சேமிப்புகள் கூட முக்கியமானவை என அவர் வலியுறுத்தினார். “எதுவும் சேமிக்காமல் இருப்பதற்குப் பதிலாக, 3% அல்லது 5% போன்ற சிறிய தொகையைச் சேமிப்பது கூட நல்ல தொடக்கமாகும்,” என்றார் அவர்.
மேலும், இந்த சேமிப்பு மனப்பாங்கு ஒருவர் வேலைக்கு செல்லத் தொடங்கும் தருணத்திலிருந்தே உருவாக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் தற்போதைய சவாலாக QR குறியீடு அடிப்படையிலான பணம் செலுத்துதல் மாறியுள்ளது. “முன்பு நாம் பணத்தை மட்டுமே எடுத்துச் சென்றோம்; அதனால் செலவுகளை கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் இப்போது QR முறையில் எல்லாமே எளிதாகிவிட்டது,” என்றார் அவர்.
“ஒருவர் QR குறியீட்டை பயன்படுத்துவதைப் பார்த்தால், நாமும் அதைப் பயன்படுத்தத் தூண்டப்படுகிறோம். தேவையில்லாத பொருள்களுக்குக் கூட உடனடியாக பணம் செலுத்தி விடுகிறோம்,” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மாற்றம், திட்டமிட்ட செலவினங்களிலிருந்து தானியங்கி பரிவர்த்தனைகளுக்குச் செல்கின்ற மனப்பாங்கை உருவாக்கியுள்ளது என அவர் எச்சரித்தார்.
“முன்பு பணப்பையில் உள்ள பணத்தை எண்ணிப் பார்த்து செலவழித்தோம். அதனால் நாம் அதிகமாக பொறுப்புடன் நடந்துகொண்டோம்,” என்றார் அவர்.
இறுதியாக, “கருவிகள் மாறிவிட்டாலும், நிதி ஒழுக்கம் மாறக்கூடாது. டிஜிட்டல் காலத்திலும் சேமிப்பு பழக்கத்தைப் பாதுகாப்பது முக்கியம்,” என்று அவர் வலியுறுத்தினார்.
'வரவு எட்டணா செலவு பத்தணா' என்பதற்கிணங்க உஸிரின் கருத்து சேமிப்பின் அவசியத்தை, நிலவிவரும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியைச் சந்ததிக்கும் தருவாயில் மேலும் வலு சேர்க்கிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 29, 2026, 5:29 pm
வறட்சியின் பிடியில் கோலோக் ஆறு: கிளாந்தானில் நீர்மட்டம் அபாயகரமாகக் குறைவு
April 29, 2026, 5:19 pm
தேசிய முன்னணி, தேசியக் கூட்டணியுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை: அமினுடின்
April 29, 2026, 5:04 pm
5 மாநிலங்களில் கைவரிசை காட்டிய 'லோன் ஷார்க்' கும்பல்: ஜொகூர் போலிசாரால் அதிரடியாக கைது
April 29, 2026, 4:46 pm
உறவினர்களிடமே கைவரிசையைக் காட்டிய ஆடவர்
April 29, 2026, 4:07 pm
நாட்டில் O, A ரத்த வகைகளின் விநியோகம் குறைந்து வருகிறது
April 29, 2026, 2:56 pm
