நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நள்ளிரவில் அதிரடிச் சோதனை: 46 வெளிநாட்டவர்கள் குடிவரவுத் துறையினரால் கைது

கோலாலம்பூர்:

பந்தாய் டாலாம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், புதன்கிழமை நள்ளிரவு மலேசியக் குடிவரவுத் துறையினர் (JIM) அதிரடிச் சோதனையை மேற்கொண்டனர். 

அப்போது அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க முயன்ற 30 வயது மதிக்கத்தக்க இந்தோனேசிய ஆடவர் ஒருவர், முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார். இருப்பினும், அப்பகுதியைச் சூழ்ந்திருந்த அதிகாரிகள் அவரை உடனடியாகக் கைது செய்தனர். பிடிபட்ட அந்த நபர், பயத்தின் காரணமாகவே குதித்ததாகவும், தனது கடவுச்சீட்டு முதலாளியிடம் இருப்பதாகவும் கூறி அதிகாரிகளிடம் மன்னிப்புக் கேட்டார்.

சுமார் நள்ளிரவு 12.10 மணியளவில் தொடங்கிய இந்தச் சோதனையின்போது, சில வெளிநாட்டவர்கள் பால்கனி கூரைகள் வழியாக ஏறித் தப்பிக்க முயன்றனர். 

மேலும் சிலர் கதவைத் திறக்க மறுத்ததால், அதிகாரிகள் நவீனக் கருவிகளைக் கொண்டு பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்தனர். இரண்டு அறைகள் மட்டுமே கொண்ட சிறிய வீடுகளில் அதிகப்படியான வெளிநாட்டவர்கள் தங்கியிருப்பது சோதனையின் போது கண்டறியப்பட்டது. 

கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்பகுதியில் இந்தோனேசியா, பாகிஸ்தான், நேபாளத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அவர்களால் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுவதாகவும் உள்ளூர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தச் சோதனையில் மொத்தம் 90 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் முறையான ஆவணங்கள் இல்லாத 46 பேர் குடிவரவுச் சட்டம் கீழ் கைது செய்யப்பட்டனர். இதில் 29 பாகிஸ்தானியர்கள், 16 இந்தோனேசியர்கள், இந்தியாவைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர். கைது செய்யப்பட்ட அனைவரும் அடுத்தகட்ட விசாரணைக்காகக் குடிவரவுத் தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தொடர்ந்து இது போன்ற அதிரடிச் சோதனைகள் நடத்தப்படும் என்றும், சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குடிவரவுத் துறை எச்சரித்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset